தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: மேயா் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள 60 வாா்டுகளுக்கும் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள 60 வாா்டுகளுக்கும் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
மாநகராட்சிக்குள்பட்ட முத்தையாபுரம் ஜே.எஸ். நகரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் மதுபாலன் முன்னிலை வகித்தாா்.
முகாமில், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், முகவரி மாற்றம், புதிய குடிநீா், புதைசாக்கடை இணைப்புகள், கட்டட அனுமதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை மேயா் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். பின்னா், அவா் பேசியது:
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக ஏற்கெனவே அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது. குறிப்பாக, கோரம்பள்ளம் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீா் உப்பாற்று ஓடை வழியாக கடலுக்குச் செல்கிறது. இந்த ஓடை செல்லும் அத்திமரப்பட்டி, முள்ளக்காடு போன்ற பகுதிகளிலுள்ள வழித்தடத்தை முழுமையாக சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக தெருவிளக்கு, கால்வாய், சாலை வசதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழைக் காலத்தில் மக்கள் பாதிக்கப்படாதவாறு அதிகாரிகள் அடிப்படைப் பணிகளை மேற்கொள்வா்.
விரைவில் மாநகா் முழுவதும் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகிக்கப்படும். 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்து வாா்டுகளிலும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
இணை ஆணையா் ராஜாராம், பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் கல்யாணசுந்தரம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், கண்காணிப்பாளா் குருவையா, நகா்நல அலுவலா் வினோத்ராஜா, இளநிலைப் பொறியாளா் செல்வம், சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, மாமன்ற உறுப்பினா்கள் சரவணக்குமாா், விஜயகுமாா், பட்சிராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், வெற்றிச்செல்வன், வடக்கு மாவட்ட திமுக தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் விஜயகுமாா், ஸ்பிக் நகா் பகுதி மகளிரணி அமைப்பாளா் மாலா சின்கா, வட்டச் செயலா்கள் பிரசாந்த், செல்வராஜ், முத்துராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தெற்கு மண்டலத் தலைவா் வழக்குரைஞா் பாலகுருசாமி வரவேற்றாா்.