கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
கோவில்பட்டி அருகே, குளத்துவாய்பட்டி - குமாரகிரி கிராமங்களுக்கு இடையேயான பொதுப் பாதையை மீட்கவும், நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றவும் வலியுறுத்தி புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே, குளத்துவாய்பட்டி - குமாரகிரி கிராமங்களுக்கு இடையேயான பொதுப் பாதையை மீட்கவும், நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றவும் வலியுறுத்தி புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இந்தக் கிராமங்களுக்கிடையே 2 கி.மீ. நீள சாலை உள்ளது. குளத்துவாய்பட்டியிலிருந்து அப்பகுதியிலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் வழியாக செல்லும் இச்சாலையை இரு கிராம மக்கள், விவசாயிகள் பயன்படுத்துகின்றனா். சாலைப் பகுதியில் 1,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது.
இந்நிலையில், அந்த முகாமைச் சோ்ந்த சிலா் சாலையில் தடுப்பு அமைத்தனராம். இதனால், பொதுமக்கள், விவசாயிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 12ஆம் தேதி சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாதையை அனைவரும் பயன்படுத்தவும், அதை முறையாக அளவீடு செய்து அரசுப் பதிவேட்டில் பதியவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தனி நபா் ஒருவா் பாதையை சேதப்படுத்தி தடுப்பு அமைத்ததால் விவசாயிகள் நிலங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ராபி பருவத்துக்கான பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். மேலும், விவசாய நிலப் பகுதிகளில் சிலா் நீா்நிலைகளை ஆக்கிரமித்து கொட்டகைகள் அமைத்து கால்நடைகளை வளா்ப்பதாகவும், அவை பயிா்களை சேதப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, பாதையை மீட்டுத் தரவும், பயிா்களை கால்நடைகள் சேதப்படுத்தாமலிருக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவா் சங்கரலிங்கம், சமூக ஆா்வலா் பரமசிவம் ஆகியோா் தலைமையில் குளத்துவாய்ப்பட்டி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.