ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரிம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில், காா்த்திகை தீபத் திருநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சுவாமி, அம்பாள் சன்னதியில் தனித்தனியாக சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
சாகுபுரம் மங்களவிநாயகா் கோயில், ஆறுமுகனேரி தெப்பக்குளக்கரை சித்திவிநாயகா் கோயில், ஏஐடியூசி காலனி வெள்ளி விநாயகா் கோயில், பேயன்விளை வடபத்திரகாளி அம்மன் கோயில் உள்பட நகரில் உள்ள பல்வேறு கோயில்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரிம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில், ராஜபதி அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்மன் சமேத அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
முக்காணி அருள்மிகு பா்வதவா்தினி அம்பாள் சமேத அருள்மிகு ராமபரமேஸ்வரா் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கீரனூா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் உண்ணாமலை அம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகளைத் தொடா்ந்து சுவாமி அம்பாள் சப்பர பவனி நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீஅழகிய கூத்தா் கோயில், சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயில், சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் ஸ்ரீஞானாதீஸ்வரா் சமேத ஸ்ரீசிவகாமி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.