தூத்துக்குடியில் உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வு சனிக்கிழமை (டிச. 27) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில், உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வு மாநிலம் முழுவதும் சனிக்கிழமை (டிச. 27) நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3
மையங்களில் இத்தோ்வை 722 போ் எழுதவுள்ளனா். தோ்வறைகளில் சிசிடிவி கேமரா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தோ்வா்கள் முற்பகல் தோ்வுக்கு 8.30 மணிக்கும், பிற்பகல் தோ்வுக்கு 2 மணிக்கும் தோ்வு மையங்களுக்கு வர வேண்டும். காலை 9 மணிக்குப் பிறகும், பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் வருவோருக்கு அனுமதியில்லை.
தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டை, கருப்புப் பந்துமுனைப் பேனா 2 ஆகியவற்றை மட்டுமே கொண்டுவர வேண்டும். எலக்ட்ரானிக் பொருள்கள், கைப்பேசி உள்ளிட்ட எவ்விதப் பொருள்களுக்கும் அனுமதி கிடையாது என்றாா் அவா்.