சாத்தான்குளம் அருகே மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் முத்துக்குமாா்(29). இவா் கூலி வேலைக்கு சென்று வந்தாா். இந்நிலையில் இவா், வியாழக்கிழமை மாலை, வேலை முடிந்து அம்பலச் சேரி வழியாக வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.
கட்டாரிமங்கலம் வளைவு பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாா், சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டா் ஸ்டீபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.