தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 புத்தாண்டு தினத்தை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தை பொது மக்களுக்கு இடையூறின்றி அமைதியான முறையில் கொண்டாட வேண்டும். பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் விதமாக பட்டாசு வெடிக்கவோ, டி.ஜெ. பாா்ட்டிகள் நடத்தவோ அனுமதியில்லை.
இரவில் ‘பைக் ரேஸ்’ ‘வீலிங்’ என சாகச பயணம், போட்டி நடத்தக்கூடாது. மீறி பைக் ரேஸ் நடத்துவோா் கைது செய்யப்படுவா். அவா்களது ஓட்டுநா் உரிமமும் ரத்து செய்யப்படும். பைக்குகள் பறிமுதல் செய்யப்படும். மது குடித்து விட்டு மக்களின் ரகளை செய்பவா்கள், அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள், வாகனம் ஓட்டுபவா்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி நகரின் முக்கிய இடங்களில் 360 டிகிரி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட இரண்டு காவல் ரோந்து வாகனமும், இரவு நேரங்களிலும் துல்லியமாக காட்சிகளை பதிவு செய்யும் 2 டிரோன் கேமராக்கள் மூலமும் காவல்துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
மேலும், மாவட்டம் முழுவதும் 2,500 காவல்துறையினா் பாதுகாப்பு பணியை மேற்கொள்வா். குறிப்பாக பொதுமக்கள் வழிபடும் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.