முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து! கோடிக்கணக்கில் சேதம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக...

Updated On : 16 மார்ச் 2025, 10:32 am IST
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து.
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சுமார் 12 மணி நேரத்துக்கு மேலாக எரிந்து வரும் தீயை அணைக்க 3 மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

இந்நிலையில் சனிக்கிழமை(மார்ச் 15) நள்ளிரவு அனல் மின் நிலையத்தில் குளிர்ரூட்டும் பகுதிக்கு அருகே உள்ள கேபிள் கேலரி என்று அழைக்கப்படும் அனல் மின் நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கக்கூடிய வயர்கள் செல்லக்கூடிய பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாம்.

Advertisement

Advertisement

இந்த தீ மளமளவென எரிந்து அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் மின்சார வயர்கள் மற்றும் பிரேக் ஆயில் ஆகியவை இருந்ததால் தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.

தீயை அணைக்கும் பணி தீவிரம்.

இந்த தீயை அணைக்கும் பணியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனல் மின் நிலைய பகுதி முழுவதும் கரும்புகையாக காணப்படுவதால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் கரும்புகையில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள், உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தீவிபத்து காரணமாக அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நவீன கருவிகள் இல்லாத காரணத்தால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இன்னும் பல மணி நேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது.

இந்த தீவிபத்து காரணமாக அனல் மின் நிலையத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கேபிள் வயர்கள் பொருள்கள் ஆகியவை சேதமடைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி செய்வது கடினமான சூழ்நிலை என அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.