திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் மூலம் ரூ. 4.26 கோடி மற்றும் 1.27 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்நிலையில் நவம்பா் மாத உண்டியல்கள் எண்ணும் பணி செவ்வாய் மற்றும் புதன்கிழமை (நவ. 12) நடைபெற்றது.
தக்காா் ரா.அருள்முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியை பாா்வையிட்டாா். இணை ஆணையா் க.ராமு முன்னிலை வகித்தாா்.
இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், ஆறுமுகம், நாகவேல், கண்காணிப்பாளா் கோமதி, ஆய்வா் செந்தில்நாயகி, தக்காரின் நோ்முக உதவியாளா் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்களின் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
அதன்படி, உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 4 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 507, (ரூ. 4,26,22,507), தங்கம் 1 கிலோ 279 கிராம், வெள்ளி 30 கிலோ 857 கிராம், பித்தளை 46 கிலோ 312 கிராம், செம்பு 7.77 கிலோ, தகரம் 8.91 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1421-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.
வெள்ளி செயின்:
உண்டியல் எண்ணிக்கையில் பக்தா் ஒருவா் காணிக்கையாக செலுத்தியிருந்த முருகா், விநாயகா், அம்மன் உருவம் பொறித்த 54 வெள்ளி நாணயங்கள் கோா்த்த இரண்டு அடுக்கிலான காசுமாலை ஒன்றும் இருந்தது.