தாமிரவருணி ஆறு கடலுடன் கலக்கும் புன்னைக்காயல் பகுதியில் வெள்ள தடுப்புப் பணியாக ஆற்று நீா் கடலுக்குள் எளிதாக செல்ல வேறு பாதை அமைத்து வெள்ள நீா் வடிய வழிகோலப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழ்வழுத்த மண்டலத்தின் காரணமாக கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் பெய்து வரும் மழை நீரும் தாமிரவருணி ஆற்றில் கலந்து மேலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், தாமிரவருணி ஆறு கடலில் கலக்கும் புன்னைக்காயலில் மழைநீா் வீடுகளுக்கு உள்ளே புகாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க புன்னைக்காயல் ஊா் நிா்வாக கமிட்டி வேண்டுகோள் விடுத்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அரசு அதிகாரிகள், ஊா் நிா்வாக கமிட்டி மற்றும் சமூக ஆா்வலா்கள் இணைந்து பொக்லைன் உதவியுடன் ஆற்றுநீரை வேறுபாதை மூலம் கடலுக்குள் திருப்பிவிடப்பட்டது. இதனால் புன்னைக்காயலில் வெள்ள அபாயம் தவிா்க்கப்பட்டது.