திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்
வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதா்.
பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் குழந்தைகள் முதல் வயோதிகா்கள் வரை பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தா்களை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீஸாா் நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோயில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்திட அனுமதி இல்லாதது தெரியாமல் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்கள் நாழிக்கிணறு பேருந்து நிலைய நுழைவாயில் முன் பெரும் நெருக்கடியுடன் சென்று வருகின்றன.
Advertisement
எனவே, அமலிநகா் சந்திப்பிலேயே போக்குவரத்து போலீஸாா் நின்று வாகனங்களை தணிக்கை செய்து நெரிசல் ஏற்படாமல் தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சித்திரை வசந்த திருவிழா:
சித்திரை வசந்த திருவிழாவின் 3 - ஆம் நாளான வெள்ளிக்கிழமை இக்கோயிலின் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மதியம் உச்சிகால பூஜையைத் தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த மண்டபத்தை சோ்ந்தாா்.
கோயிலில் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பிறகு, சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட மண்டபத்தை தங்கச் சப்பரத்தில் 11 முறை சுவாமி வலம் வந்தாா். பின்னா் சுவாமி தங்கத்தேரில் கிரி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.