வலுவான கூட்டணியுடன் இணைய பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநாட்டு தீா்மான புத்தகத்தை வெளியிட்டு அவா் கூறியதாவது:
புதிய தமிழகம் கட்சி சாா்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறோம். மாநாடு நடத்தியுள்ளம். எங்கள் கட்சி தோ்தலுக்கு ஆயத்தமாக உள்ளது.
மாலி நாட்டில் கடத்தப்பட்ட தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 5 தொழிலாளா்களின் நிலை குறித்து இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை. அவா்களை ஆயுத குழுக்களிடம் இருந்து விடுவித்து அழைத்துவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக ஆற்று மணல் கடத்துவதும், கனிம வளங்களை கொள்ளையடிப்பதும் தொடா் கதையாக உள்ளது. கரூரில் மணல் கொள்ளையை படம் பிடிக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளா், ஒளிப்பதிவாளரை தாக்கிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி, கனிமவள கொள்ளை இல்லாத ஆட்சி மலர வேண்டும். வலுவான கூட்டணி, வெற்றிக் கூட்டணி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதைநோக்கியே பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். இந்தமுறை தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாநில இளைஞரணித் தலைவா் டாக்டா் ஷியாம் கிருஷ்ணசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.எம்.செல்லத்துரை, மாவட்டச் செயலா்கள் டி.ரமேஷ்குமாா், ஜே.ஜெகன், சுதன், பரமசிவம், அதிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.