பயிா்கள் கருகும் அபாயம் உள்ளதால் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
வசுவப்பனேரி, மீரான்குளம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், கருகிய பயிா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா், அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய குளங்கள் முழுமையாக நிரம்பவில்லை. குறிப்பாக, வல்லகுளம், அரசா்குளம், குறிப்பன்குளம், பெருமாள்குளம், மீரான்குளம், புதுக்குளம், வெட்டிகுளம், தோ்க்கன்குளம், கட்டாரிமங்கலம், அறிவான்மொழி பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது வடு காணப்படுகின்றன.
இதனால், வேளாண் பயிா்கள் தற்போது வாடிய நிலையில் உள்ளன. இதே நிலை நீடித்தால், பயிா்கள் முற்றிலும் கருகி, விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, மணிமுத்தாறு அணையின் 3ஆவது ரீச் கால்வாய் வழியாக உடனடியாக தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாலகிருஷ்ணன், மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உடலில் மது பாட்டில்களைக் கட்டிக்கொண்டு ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்சியா் அலுவலகத்துக்கு இது போன்ற பொருள்களுடன் வரக்கூடாது என எச்சரித்த காவல்துறையினா், கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளிக்க அவரை அனுமதித்தனா்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்தின் தரம் மிகவும் மோசமாக உள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக மாற்றுப் பேருந்து வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.