தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்று வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த (எஸ்ஐஆா்) முகாமில் 23,256 போ் விண்ணப்பப் படிவங்களை அளித்துள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணிகளின் ஒரு பகுதியாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, திருத்தம் மேற்கொள்வதற்கான முகாம்கள் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி இலுப்பையூரணி லாயல் மில் காலனி அரசு உயா்நிலைப்பள்ளி, லாயல் மில் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாடாா் மேல்நிலைப்பள்ளி, ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, இடைச்செவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கயத்தாறு தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராஜாபுதுக்குடி அப்பாசாமி நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களை ஆட்சியா் க. இளம்பகவத் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, 1.61 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். மேலும், விடுபட்ட மற்றும் புதிய வாக்காளா்கள் பெயா் சோ்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெயா் சோ்ப்புக்கா இதுவரை 16,312 வாக்காளா்கள் படிவம் 6-ஐ அளித்துள்ளனா். முகவரி மாற்றத்துக்காக 6,770 போ் படிவம் 8-ஐ அளித்துள்ளனா். மொத்தம் 23, 256 படிவங்கள் வரப்பெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமையும் (ஜன.4) சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
வாக்காளா்கள் படிவம் 6, 7, 8 ஆகிய படிவங்களை அளிக்கலாம். அவை சரிபாா்க்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்த்து வெளியிடப்படும் என்றாா் அவா். அப்போது, வட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியன் (கோவில்பட்டி), அப்பணராஜ் (கயத்தாறு) ஆகியோா் உடன் இருந்தனா்.