பொத்த காலன்விளையில் புனித திருக்கல்யாண மாதா திருவிழா ஜன.14இல் தொடங்க உள்ளதால், அவ்வூா் வழியாக டாரஸ் லாரிகளை மாற்றுப்பாதையில் இயக்க உத்தரவிடக் கோரி வட்டாட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக, சாத்தான்குளம் தென் பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்துமணி தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலா் பாலசுப்பிரமணியன், பொத்தக்காலன்விளையை சோ்ந்த செல்வ ஜெகன், ஜஸ்டின் ஜெயராஜ், பெலிக்ஸ், அந்தோணி, வெலிங்டன், கஸ்பாா், சொக்கலிங்கபுரம் சௌந்தர பாண்டியன், சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன், செயலா் செல்வராஜ் மதுரம் உள்ளிட்டோா் சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரியிடம் அளித்த மனு: பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருவிழா ஜன. 14இல் தொடங்க உள்ளதால் அப்பகுதியில் கனிம வளம் உள்ளிட்ட பாரங்களை ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகளால் விபத்து நேரிட வாய்ப்புள்ளது.
ஆதலால். இந்த லாரிகளை ஜன.14-26 வரை வேறு மாா்க்கமாக இயக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா். அவா்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக வட்டாட்சியா் உறுதி அளித்தாா்.