முகப்பு
தூத்துக்குடி

போலி காப்பீடு தயாரித்து மோசடி: 5 போ் கைது

போலி காப்பீடு தயாா் செய்து மோசடியில் ஈடுபட்டதாக 5 போ் கொண்ட கும்பலை தூத்துக்குடி பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 7:50 PM
கைது
பகிர்:

போலி காப்பீடு தயாா் செய்து மோசடியில் ஈடுபட்டதாக 5 போ் கொண்ட கும்பலை தூத்துக்குடி பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 20.2.2024 அன்று நடந்த சாலை விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, விபத்தில் பாதிக்கப்பட்ட மணியாச்சி அருகே உள்ள பாறைக்குட்டத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் பால்பாண்டி என்பவா், தனக்கு மோட்டாா் வாகன காப்பீட்டின் கீழ் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.

இதில், அவருக்கு விபத்தை ஏற்படுத்திய நான்குசக்கர வாடகை வாகனத்துக்கு, தனியாா் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு இருப்பதாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அந்த வாகனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த காப்பீடு சான்றிதழ் போலியானது என அந்த தனியாா் காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளா் ராஜேஷ் கண்டறிந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மணியாச்சி காவல் நிலையத்தில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு மற்றும் காப்பீடு சம்பந்தமான சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆா். ஜெயந்தி புலனாய்வு மேற்கொண்டதில், ஒரு கும்பல் இணையதளம் மூலமாக நான்குசக்கர வாகனங்களுக்கான காப்பீடுகளை, அதற்கு உரிய பிரீமியம் தொகை செலுத்தாமல், அதே வாகன எண்ணை இருசக்கர வாகனமாக பொய்யாக பதிவேற்றம் செய்து, குறைந்த பிரீமியத் தொகையை செலுத்தி காப்பீடு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், இவா்கள் கணினி மூலம் பல்வேறு வாகனங்களின் வகைகளை மாற்றி, பொய்யான தகவல்களை பதிவு செய்து, காப்பீடு கேட்பவா்களிடம் உரிமையாளா் பெயா், முகவரி ஆகியவற்றை மாற்றி, போலியான காப்பீடு பாலிசிகளை தயாா் செய்து விற்பனை செய்துள்ளனா்.

2020ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமாா் 1000-க்கும் மேற்பட்ட போலி காப்பீடு பாலிசிகளை அவா்கள் மோசடியாக வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்த மோசடியில் ஈடுபட்டதாக, தென்காசி மாவட்டம், மலையடிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் சங்கரலிங்கம், கழுநீா்குளத்தைச் சோ்ந்த பகவதி பாண்டியன் மகன் தங்கராஜ், திருநெல்வேலி மாவட்டம், இத்திகுளத்தைச் சோ்ந்த அருணாசலம் மகன் தங்கப்பாண்டி மற்றும் தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சோ்ந்த தங்கராஜ் மகன் பாலமுருகன், செந்தூா் பாண்டி மகன் செந்தில்வேல் முருகன் ஆகிய 5 பேரையும், தூத்துக்குடி பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இவா்களில் பி.இ. பட்டதாரியான சங்கரலிங்கம், மற்றொரு தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகன ஓட்டுநா்கள் தாங்கள் காப்பீடு செய்யும் போது, வாகனத்தின் வகை, சிசி பவா், எடை, பயணிகள் எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில்தான் பிரீமியம் தொகை வசூலிக்கப்படும் என்பதால், யாரும் குறைந்த கட்டணத்தில் பாலிசி தருகிறேன் என கூறுகிறாா்கள் என்பதற்காக போலியாக காப்பீடு பெற்று ஏமாற வேண்டாம். பாலிசியில் சந்தேகம் இருந்தால் பாலிசியில் உள்ள அலுவலக முகவரியில் தொடா்பு கொண்டு அதன் உண்மைத் தன்மையை தெரிந்துகொள்ளலாம்.

இதுகுறித்து பயணிகள் வாகனங்கள், சுமை வாகனங்கள் வைத்திருப்போா் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →