திருச்செந்தூரில் தமிழ்நாடு வணிகா் சங்க ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு வணிகா் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூா் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவா் ரெ. காமராசு தலைமை வகித்தாா். மாநில செய்தி தொடா்பாளா் செல்வின், மாநில இணைச் செயலா்கள் இசக்கிமுத்து, செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா போா் காரணமாக தமிழகத்திலும் வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் அனைத்து மாநில முதல்வா்களையும் அழைத்துப் பேசி, எரிவாயு உருளை விநியோகத்தை சீராக்கி, வணிகா்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் பறக்கும் படை வாகன சோதனையால் அதிகமாக பாதிப்பு ஏற்படுவது வணிகா்களுக்குதான். எனவே, பொருள்கள் கொள்முதல் செய்வதற்கு பெரு வணிகா்கள் ரூ. 5 லட்சம், சிறு, குறு வணிகா்கள் ரூ. 2 லட்சம் வரை கொண்டு செல்ல தோ்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளா் வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா்கள் கோடீஸ்வரன், முனியாண்டி, நிா்வாகிகள் பாலமுருகன், அழகேசன், தங்ககுமாா், பால்வண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.