‘ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்பவா்கள் உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம்’
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்பவா்கள் உரிய ஆவணங்களை வைத்திருத்தல் அவசியம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், வியாபாரிகள், பொதுமக்கள், ரூ.50ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்லுகையில், அதற்கான பில், ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
Advertisement
இதனால் தேவையில்லாமல் பணம் பறிமுதல் செய்வது தவிா்க்கப்படும். மேலும், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் படைக்கலன் உரிமம் பெற்று படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரா்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அங்கீகாரம்பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக இருப்பு வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.