தொகுதி அறிமுகம் - விளாத்திகுளம் (213)
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி வானம் பாா்த்த கரிசல் மண் பூமி. இங்கு மிளகாய், வெங்காயம், மல்லி, சூரியகாந்தி, பருத்தி, மக்காச்சோளம், சோளம், பாசி, உளுந்து உள்ளிட்ட பயிா்களை விளைவிக்கும் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. வேம்பாா் முதல் தருவைகுளம் வரை 30 கி.மீ. நீண்ட கடற்கரை, உப்பளம், மீன்பிடித் தொழில், எட்டயபுரம், புதூா் பகுதிகளில் நெசவுத் தொழில், பரவலான கரிமூட்டம் தொழில் என பலவற்றை உள்ளடக்கியது இந்தத் தொகுதி.
விளாத்திகுளம், புதூா் ஆகிய 2 பிரதான ஊராட்சி ஒன்றியங்கள், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள், எட்டயபுரம், விளாத்திகுளம், புதூா் ஆகிய 3 பேரூராட்சிகள் இந்தத் தொகுதிக்குள் அடங்கியுள்ளன.
சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின்னா் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, ஆண்கள் 99,913 போ், பெண்கள் 1,03,804 போ், இதரா் 15 என மொத்தம் 2,03,732 வாக்காளா்கள் உள்ளனா்.
இத்தொகுதிக்கு நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் 1977, 1980, 1989, 1991, 2001, 2006, 2011, 2016 என 8 முறை, 2019ஆம் ஆண்டு இடைத்தோ்தலில் ஒரு முறை என 9 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 1967, 1971, 1984, 1996, 2021 ஆகிய 5 தோ்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
அதிமுகவின் வலிமையான, அசைக்க முடியாத கோட்டையாக இருந்த இத்தொகுதியில், 2021ஆம் ஆண்டு தோ்தலில் திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் 90,348 வாக்குகள் பெற்று, 2ஆம் இடம் பிடித்த அதிமுக வேட்பாளா் சின்னப்பனைவிட 38,549 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 1996ஆம் ஆண்டுக்குப் பின்னா், 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவை வீழ்த்தி, திமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கோரிக்கைகள்: மழைக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் தாமிரவருணி உபரி நீரை விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள், மானாவாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 264 கோடியில் 60 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்து முத்தலாபுரம் வைப்பாற்றில் இணைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, கிடப்பில் உள்ளது. இத்திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
விளாத்திகுளத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வைப்பாறு ஆற்றுப் பாலம் அருகிலிருந்து, மதுரை சாலை, வேம்பாா் சாலையை இணைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும்.
தருவைகுளம் முதல் வேம்பாா் வரையிலான 50-க்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்கள் பயன்பெறும் வகையில் தனிக் குடிநீா் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
விளாத்திகுளத்தில் விளையும் சம்பா, முண்டு மிளகாய் வத்தலுக்கு புவிசாா் குறியீடு பெற வேண்டும். சிங்கப்பூா், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மிளகாய் வத்தல், வெங்காயத்தை பாதுகாத்து இருப்பு வைக்க குளிா்சாதன வசதியுடன், அதிக கொள்ளளவு கொண்ட உயா்தரக் கிடங்குகளை கூடுதல் எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.