திருச்சி

மலைக்கோட்டை ரயில் புறப்படும் நேரத்தில் குழப்பம்

திருச்சி, ஆக. 3:  கும்பகோணத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் மலைக்கோட்டை விரைவு ரயில் திருச்சியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் நேர அறிவிப்பில் ரயில்வே நிர்வாகம் முரண்பாடான தகவல்களைத் தெரிவ

தி. இன்பராஜ்

திருச்சி, ஆக. 3:  கும்பகோணத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் மலைக்கோட்டை விரைவு ரயில் திருச்சியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் நேர அறிவிப்பில் ரயில்வே நிர்வாகம் முரண்பாடான தகவல்களைத் தெரிவித்துள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

  மலைக்கோட்டை ரயிலுக்கும் சர்ச்சைக்கும் என்ன ஒற்றுமையோ தெரியவில்லை அடிக்கடி பிரச்னையில் அடிபடுவது வழக்கமாகிவிட்டது. திருச்சி- சென்னை இடையே இயக்கப்பட்டு பின்னர், தஞ்சாவூர்- சென்னை இடையேயும், தற்போது கும்பகோணம்- திருச்சி இடையேயும் இயக்கப்பட்டு வருகிறது திருச்சிக்கு பெருமை சேர்க்கும் மலைக்கோட்டை பெயரைத் தாங்கிய விரைவு ரயில்.

  திருச்சி- சென்னை இடையே மீண்டும் இயக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், முயற்சிகள் அனைத்தும் தண்ணீரில் எழுதப்பட்டவையாகவே உள்ளன.

  விரைவில் திருச்சி - சென்னை இடையே இந்த ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு நீண்ட நாள்களாவே கேட்டுப் பழகிவிட்டது. ஆனால், அந்த "விரைவில்' மட்டும் இன்னும் வரவே இல்லை.

  இருக்கும் பிரச்னைகள் போதாதென்று தற்போது புறப்படும் நேரத்தை பயணச்சீட்டு, இணையதளம் ஆகியவற்றில் ஒரு விதமாகவும், கால அட்டவணையில் வேறு விதமாகவும் குறிப்பிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது ரயில்வே நிர்வாகம். அதாவது, இத்தனை காலமும் திருச்சியில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு புறப்பட்டு வந்த மலைக்கோட்டை விரைவு ரயில் புதிய கால அட்டவனைப்படி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

  இதற்கான அறிவிப்பு தெற்கு ரயில்வே நிர்வாகம் கடந்த மாதம் வெளியிட்ட புதிய  கால அட்டவணையில் 93-ம் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் இருந்து இரவு 9.55 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வரும் ரயில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஆனால், பயணச் சீட்டில் புறப்படும் நேரத்தைக் குறிப்பிடும் இடத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் பழைய மாதிரியே இரவு 10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதேபோல, இணையதளத்தில் ரயிலின் நேரத்தைப் பார்க்கும்போதும் இரவு 10 மணிக்குதான் ரயில் புறப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை  வரை அப்படியே குறிப்பிடப்பட்டிருந்தது.

   இதனால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுபற்றி ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் புகார் செய்தபோதிலும், முறையான எந்தப் பதிலும் தெரிவிக்கப்படுவதில்லை.

  முன்பதிவு மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் சந்தேகம் கேட்கும் பயணிகளுக்கு அர்ச்சனை மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது. விதிமுறைகள் குறித்து ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே "நாங்கள் என்ன செய்ய முடியும். இது உயர் அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விஷயம்' என நழுவிக் கொள்கின்றனர்.

  மேலோட்டமாகப் பார்க்கும்போது இரவு 10 மணிக்குப் பதிலாக 20 நிமிஷம் தாமதமாக இரவு 10.20 மணிக்குப் புறப்படுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை என்றே தெரியும்.

  ஆனால், இதுவரை இரவு 10.20 மணிக்கு புறப்பட்டுச் சென்ற மங்களூர் விரைவு ரயில் ஆகஸ்ட் முதல் தேதி முதல் இரவு 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. இரண்டு ரயில்களுமே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் இருந்தே புறப்பட்டுச் செல்வதால், பயணிகள் மத்தியில் கடந்த மூன்று நாள்களாக பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

  கடைசி நேரத்தில் ரயிலைப் பிடிக்க வேண்டும் என்று வரும் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தக் குழப்பத்துக்குள் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிய விஷயமாக இதைக் கருதாமல் ரயில்வே நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு குழப்பத்தைச் சரிசெய்ய வேண்டும் என்கின்றனர் ரயில்வே பயணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT