மன்னார்குடி சட்டுருட்டி வாய்க்கால் தூர்வாரப்படுமா?
மன்னார்குடி, டிச. 29: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மழைக் காலங்களின் குடியிருப்புகள் வெள்ள நீரால் சூழப்படுவதைத் தவிர்க்க, நகரின் பிரதான வாய்க்காலான சட்டுருட்டி வாய்க்காலைத் தூர்வார வேண்டும் எனப
மன்னார்குடி, டிச. 29: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மழைக் காலங்களின் குடியிருப்புகள் வெள்ள நீரால் சூழப்படுவதைத் தவிர்க்க, நகரின் பிரதான வாய்க்காலான சட்டுருட்டி வாய்க்காலைத் தூர்வார வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நகரின் வடசேரிசாலைப் பகுதி கிராமங்களில் விவசாயத்திற்காக பாசனக் கால்வாயாக சட்டுருட்டி வாய்க்கால் பயன்பட்டு வந்தது.
மன்னார்குடி நகரில் நுழையும் போது சட்டுருட்டி வாய்க்கால் என்ற பெயருடன் நகரின் ஒரு பகுதியில் ஓடி 2 கி.மீ. தொலைவிற்கு நீர் ஆதாரமாக பயன்பட்டு, செட்டிக்குளம் அருகே பாமணி ஆற்றில் கலந்து வந்தது இந்த வாய்க்கால்.
Advertisement
40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சட்டுருட்டி வாய்க்கால் நகரின் 10-க்கும் மேற்பட்ட வார்டுகளின் மழை நீர் வடிகாலாகவும், குளங்களிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் செல்லும் பாதையாகவும் இருந்து வந்துள்ளது.
கடந்த 1964-ம் ஆண்டு பிரதான வாய்க்கால் செல்லும் பாதையான நடேசன் தெருவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டதாலும், பாலகிருஷ்ணாநகர் பகுதியில் பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் கட்டப்பட்டதாலும், நகர்ப் பகுதி விரிவடைந்ததாலும், ஊரகப் பகுதியில் இருந்த வயல்கள் குடியிருப்புகளாக மாறியதாலும் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் செல்லும் வாய்காலாக, வர்த்தக நிறுவனங்களின் குப்பைகள் கொட்டப்படும் இடமாகவும் இந்த வாய்க்கால் மாறியது.
இதைத்தொடர்ந்து, பல ஆண்டுகாலமாக வாய்க்கால் தூர்வாரப்படாததால், மழைக் காலங்களில் மழை நீர் வெளியேற வசதியில்லாமல் அந்தோனியார் கோவில் தெரு, நடேசன் தெரு, பாலகிருஷ்ணாநகர், பழைய தஞ்சை சாலை, உப்புக்காரத் தெரு, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக் காடாக மாறுகிறது. வெள்ள நீர் வடிவதிலும் காலதாமதம் ஏற்பட்டு, சுகாதாரச் சீர்கேடு, தொற்று நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து 19-வது வார்டு உறுப்பினர் எம்.எஸ். வீரகுமார் கூறியது:
சட்டுருட்டி வாய்க்காலை தூர் வார வேண்டும் என தமிழக அரசுக்கும், பொதுப் பணித் துறைக்குக்கும் மனு அனுப்பியும், நகர்மன்றக் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்ததால், பொதுப் பணித் துறையின் பாராமரிப்பில் இருந்து வந்த வாய்க்கால், மன்னார்குடி நகராட்சியின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அப்போதைய நகர்மன்றத் தலைவராக இருந்த பழ. மணியின் முயற்சியால் | 56 லட்சத்தில் வாய்க்காலில் மராமத்துப் பணிகள் மேற்கொண்டதுடன், செட்டிக்குளம் முகத்துவாரத்திலிருந்து தாமரைக்குளம் வடகரை பாலம் வரை சுமார் ஒரு கி.மீ. தொலைவிற்கு வாய்க்காலின் இருபுறமும் தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது.
ஆனால், அதற்குப் பின்னர், தூர்வாருதல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி நிர்வாகம் போதிய கவனம் செலுத்தாததால், தற்போது மழைக் காலங்களில் மன்னார்குடி நகரம் வெள்ளக் காடாக மாறி வருகிறது என்றார் அவர். கடந்த 2008-ம் ஆண்டு வீசிய நிஷா புயலின் போது பெய்த மழையால் பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, பாலகிருஷ்ணாநகர் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், அங்கு குடியிருந்தவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், வெள்ள நீர் சூழ்ந்ததால், தூய வளனார் பெண்கள் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் தீயணைப்பு வீரர்கள், போலீஸôர் உதவியுடன் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
இதனால், கடந்த மாதம் பெய்த மழையின் போது முன்னெச்சரிக்கையாக அப் பகுதி மக்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றதுடன், விடுதி மாணவிகள் வெளியேற்றப்பட்டு, பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.
எனவே, நகரப் பகுதியின் பிரதான சட்டுருட்டி வாய்க்கால் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் அதோடு, வாய்க்காலைத் தூர் வாரி, அதன் தரைத் தளத்தில் சிமென்ட் தளம் அமைத்து சீரமைக்க வேண்டும். கழிவு நீர், மழை நீர் தனித்தனி வழித்தடத்தில் செல்லும் வகையில் நவீன இரு வழிக் குழாய் வசதி அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி, திட்டத்தை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்பதே மன்னார்குடி நகர மக்களின் எதிர்பார்ப்பு.