திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக் கருவிகள் பழுது; நோயாளிகள் அவதி

திருச்சி, ஜூலை 20: திருச்சி அரசு மருத்துவமனையில் கொடிய நோய்களைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் பழுதடைந்துள்ளதால், நோயாளிகள் வெளியூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது

தி. இன்பராஜ்

திருச்சி, ஜூலை 20: திருச்சி அரசு மருத்துவமனையில் கொடிய நோய்களைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் பழுதடைந்துள்ளதால், நோயாளிகள் வெளியூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது.

   இந்த மருத்துவமனை மூலம் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமன்றி அருகிலுள்ள கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பயனடைந்து வருகின்றனர்.

   157 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 10,000 பேர் புற நோயாளிகளாகவும்,

ஏறத்தாழ 1,300 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறும் இந்த அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லை என்பது நீண்ட நாள்காகக் கூறப்படும் புகார்.

  மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த இந்த மருத்துவமனை கடந்த 1997-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கேற்ப வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.

  ஏறத்தாழ 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மருத்துவமனையில் 5 ஏக்கர் பகுதியில் மட்டுமே கட்டடங்கள் உள்ளன. மீதமுள்ள 20 ஏக்கர் நிலம் காலியாகவே உள்ளது. இந்தப் பகுதியில் கூடுதல் கட்டடங்கள் கட்டினால், மக்களுக்கு ஓரளவு வசதிகள் கிடைக்கும். மருத்துவ மாணவர்கள் விடுதிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 3 கோடி தவிர, கூடுதல் கட்டடங்கள் கட்ட இதுவரை மாநில அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

   நாள்தோறும் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 1,300 என மருத்துவமனை நிர்வாகம் கூறி வந்த போதிலும், மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 600 மட்டுமே. நாள்தோறும் 50 சதம் பேர் தரையில் படுத்துத்தான் சிகிச்சை பெற வேண்டிய கட்டாய நிலை நிலவுகிறது.  

  சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குறைந்தது வாரம் ஒரு முறையாவது ரத்த சுத்திகரிப்பு செய்ய வேண்டும். ஆனால், ரத்தம் சுத்திகரிப்பு செய்ய பயன்படுத்தப்படும் (டயாலிஸிஸ்) கருவி கடந்த சில மாதங்களாகப் பழுதாகியுள்ளது.

   வயிற்றுநோய்கள் தொடர்பாக பரிசோதனை செய்யும் என்டாஸ்கோப், லேப்ராஸ்கோப் கருவி, பித்தநீர், சிறுநீர் பரிசோதனை செய்யும் சிஸ்டாஸ்கோப் கருவி, மலம் பரிசோதனை செய்யும் கொளனாஸ்கோப் கருவி போன்றவையும் செயல்படாமல் பழுதாகியுள்ளன.

   இதுபோன்ற நோய்களுக்காக பரிசோதனை செய்ய வரும் நோயாளிகளை தஞ்சாவூர், மதுரை, கோவை அல்லது சென்னைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் நிலை உள்ளது.

  பொதுவாக ஏழைகள்தான் அரசு மருத்துவமனையை நாடி வரும் நிலை உள்ளது. நோய் பாதிக்கப்பட்டதால், மனமுடைந்து காணப்படும் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்படும்போது, மேலும் மனதளவில் பாதிக்கப்படுகிறன்றனர்.  தவிர, மகப்பேறு பிரிவில் உள்ள அவல நிலை வெளியே கூற முடியாதவை. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உதவியாக வருபவர்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படும் நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது.

  பிறந்த குழந்தைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்கள் பற்றாக்குறையும் அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், விபத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையையே தேடி வரும் நிலை உள்ளது. ஆனால், விபத்து சிகிச்சைப் பிரிவில் போதிய வசதிகள் இல்லை.

   இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் ப. பன்னöர்செல்வம் கூறியது:

  "திருச்சி அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தவோ அல்லது மருத்துவக் கருவிகள் வாங்க நிதி ஒதுக்கவோ மாநில அரசு முன்வராதது மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

  ஸ்கேன் எடுக்க மாதக் கணக்கில் காத்திருக்கும் நிலையை உடனடியாக போக்க வேண்டும். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்தச் சுத்திகரிப்புக்குத் தேவையான டயாலிஸிஸ் கருவி செயலிழந்து இருப்பதை சீர்செய்யாமல் இருக்கும் சுகாதாரத் துறை நிர்வாகத்தைக் கண்டிக்கிறோம்.

  மருத்துவமனைக்குத் தேவையான கருவிகளை வாங்க வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தவுள்ளோம்' என்றார் அவர்.

  எனவே, ஏழை நோயாளிகள் பயனடையும் வகையில் பழுதான கருவிகளை விரைவில் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

பயன்படுத்தாமல் உள்ள ரூ. 20 லட்சம்

கடந்த அதிமுக ஆட்சியில் 2001 முதல் 2004-ம் ஆண்டு வரை மருத்துவமனை மேம்பாட்டுக்காக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளைப் பார்க்க வருவோரிடம் நுழைவுக் கட்டணமாக ரூ. 5 வீதம் வசூலிக்கப்பட்டது.

  இந்த வகையில், மூன்று ஆண்டுகளில் வசூலான ரூ. 20 லட்சம் நிதி திருச்சி அரசு மருத்துவமனையில் செலவிடப்படாமலேயே உள்ளது. செலவு செய்வதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், மருத்துவ நிர்வாகம் இந்த நிதியை பயன்படுத்த முடியவில்லை என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  இந்த நிதியைப் பயன்படுத்தி பழுதான கருவிகளைச் சரி செய்தால் நோயாளிகள் அவதி அடைய வேண்டியதில்லை. இதுதவிர, சட்டப்பேரவை மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்துகூட கருவிகளைப் பழுது நீக்க நிதி ஒதுக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT