நீடாமங்கலம், அக். 1: நீடாமங்கலம் - தஞ்சை நெடுஞ்சாலையில் கொண்டியாறு பகுதியிலிருந்து நாவல்பூண்டி செல்லும் தார்ச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் - தஞ்சை சாலையில் உள்ளது கொண்டியாறு பகுதி. இங்கிருந்து நாவல்பூண்டி வரை சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு தார்ச் சாலை உள்ளது. இந்தச் சாலையைத்தான் கொண்டியாறு, சோத்தரை, மேலப்பூவனூர், காளாச்சேரி, சோணாப்பேட்டை, கீழப்பட்டு, நாவல்பூண்டி, ராயபுரம் கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தி வரும் இந்தச் சாலை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.
இந்தச் சாலை சேதமடைந்த காரணத்தால் இந்தத் தடத்தில் சென்று வந்த அரசு நகரப் பேருந்து தடம் எண் 27 பல மாதங்களுக்கு முன்னரே நிறுத்தப்பட்டுவிட்டது என இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வடுவூரிலிருந்து செட்டிசத்திரம், சோணாப்பேட்டை, காளாச்சேரி, மேலப்பூவனூர் வழியாக நீடாமங்கலம் வரை வந்து சென்று கொண்டிருந்த மினி பேருந்தும், அம்மாப்பேட்டை, கோயில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, காளாச்சேரி, மேலப்பூவனூர் வழியாக நீடாமங்கலம் வரை வந்து சென்ற மினி பேருந்தும் இந்த வழியாக இயக்கப்படுவதில்லை. இதனால், இப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், இப் பகுதி மக்கள் நீடாமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்குச் செல்ல ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையே நாட வேண்டியுள்ளது. அதிலும், குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் வேளாண் பொருள்களை அருகிலுள்ள நகரத்திலிருந்து டிராக்டர், லாரி போன்ற வாகனங்களில் ஏற்றி வருவதிலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் ஏற்கெனவே பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டு.
கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகள், இப் பகுதியைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பயன் பெறும் வகையில், இந்தச் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மேலும், இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.