முகப்பு
திருச்சி

களையிழந்த மன்னார்குடி பூமாலை வணிக வளாகம்

மன்னார்குடி, அக். 3:  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் குழுக்கள் தயாரிக்கும் உற்பத்திப் பொருள்களுக்கு, போதிய விற்பனை இன்ற

Updated On : 20 செப்டம்பர், 2012 at 9:33 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:15 PM

மன்னார்குடி, அக். 3:  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் குழுக்கள் தயாரிக்கும் உற்பத்திப் பொருள்களுக்கு, போதிய விற்பனை இன்றி கடைகள் மூடப்படுவதால், அந்த வளாகம் களையிழந்து காணப்படுகிறது.

  கடந்த 2006-ம் ஆண்டு மன்னார்குடி வ.உ.சி. சாலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிதியிலிருந்து | 30 லட்சத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பூமாலை வணிக வளாகத்தை அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  இந்த வளாகத்தில் தரைத் தளத்தில் 12 கடைகளும், முதல் தளத்தில் மகளிர் குழுவினருக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கான இரண்டு கூட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டன.

Advertisement

    இந்த வளாகத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் விற்பனை செய்ய, கடைகள் | 500-க்கு வாடகைக்கு விடப்பட்டன.   போதிய வருவாய் கிடைக்காததாலும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்ததால், அடுத்தடுத்து சில கடைகள் மூடப்பட்டன.

  தற்போது 2 அரிசிக் கடை உள்ளிட்ட 6 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன.

   நகரின், கடைகோடியில் பூமாலை வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளதால், பலருக்கு வணிக வளாகம் இருப்பதே தெரியவில்லை.

மேலும் வளாகத்தின் நுழைவு வாயில் அருகிலேயே கடைகளை அமைக்காமல் சுமார் 200 மீட்டர் தள்ளி அமைத்ததால், அந்தப் பகுதியினர் வாகனங்களை, வளாக நுழைவு வாயில் பகுதியில்  நிறுத்தி வைக்கின்றனர். இதனால், வளாகத்தின் உள்ளே கடைகள் இருப்பதே தெரிவதில்லை.  

மேலும், கடைகள் பூட்டியிருப்பதாலும், குறித்த நேரத்தில் கடைகள் திறக்கப்படாததாலும் உரிய பராமரிப்பு, சுகாதாரம் இன்றி காணப்படுகிறது.

  இந்த வளாகத்தின் உள்ளே வடக்குப் பகுதியில், உழவர் சந்தை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு, வேளாண் துறை சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால், உழவர் சந்தைக்கு வரும் மக்கள் மகளிர் குழுக்களின் பொருள்களையும் வாங்கும் வாய்ப்பு உள்ளதாக சுய உதவிக் குழுவினர் தெரிவித்தனர்.   

  எனவே, ஒன்றிய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் மக்களிடம் சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.