திருச்சி

நீதிமன்ற புதிய கட்டடப் பணிகள் தொடங்குவது எப்போது?

திருச்சி, செப். 14: திருச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கான புதிய கட்டடப் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வழக்குரைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது. திருச்சி கன்டோன்மென்

தி. இன்பராஜ்

திருச்சி, செப். 14: திருச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கான புதிய கட்டடப் பணிகள் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வழக்குரைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 1903-ம் ஆண்டு கட்டப்பட்டது. 23.5 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த வளாகத்தில் ஏறத்தாழ 7 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே கட்டடங்கள் உள்ளன.

இங்கு வழக்கு தொடர்பாக தினமும் சராசரியாக 3,000 பேர் வரை வந்து செல்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஏறத்தாழ 2,000 வழக்குரைஞர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சுமார் 250 பேர் பெண்கள்.

இங்கு, மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் நீதிமன்றம், விரைவு நீதிமன்றங்கள், தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றம், குற்றவியல் நடுவர் மன்றங்கள் என மொத்தம் 18 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வளாகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக எந்தவித புதியக் கட்டடமும் கட்டப்படவில்லை.

மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு தனி கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பிறகு என்ன ஆனதென்றே தெரியவில்லை.

பழைமையானவை என்பதாலும், தேவைக்கேற்ப கூடுதலாக நீதிமன்றங்கள் செயல்பட போதிய கட்டட வசதி இல்லாததாலும், அனைத்து வசதிகளும் கொண்ட புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் தரப்பில் அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தொடர் போராட்டங்களும் நடைபெற்றன.

இதையடுத்து, கடந்த 2003-ம் ஆண்டு ரூ. 51 லட்சம் ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் தொடங்குவதில் தாமதம் நிலவியது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இருப்பினும், வழக்குரைஞர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால், கடந்த 2006-ம் ஆண்டு கூடுதலாக ரூ. 15 லட்சம் சேர்த்து ரூ. 66 லட்சத்தில் கட்டடங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

புதிய கட்டடங்கள் கட்டுவது தொடர்பாக கடந்த 27-01-2009 அன்று பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் (திட்டம் மற்றும் வடிவமைப்பு) தலைமையிலான குழுவினர் திருச்சிக்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, 18 நீதிமன்றங்கள் மற்றும் 3 நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்கான உத்தேச மதிப்பீடு ரூ. 25.20 கோடிக்கு தயாரிக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அரசின் ஒப்புதல் பெறுவதற்காக, உள்துறைச் செயலருக்கு கடந்த 25-03-2010 அன்று அனுப்பப்பட்டது.

புதிய கட்டடப் பணிக்கான மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையை அரசுதான் எடுக்க வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அரசின் நிர்வாக ஒப்புதல் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய கட்டடங்கள் கட்டுவது தொடர்பாக கடந்த 19-04-2010 அன்று ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்சோதி (அதிமுக) பேரவையில் கேள்வி எழுப்பினார். "புதிய கட்டடங்கள் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, உயர் நீதிமன்றப் பதிவாளரால் பரிந்துரைக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, கட்டடப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்' என்றார் அவர்.

இதுகுறித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஆலோசகர் வழக்குரைஞர் கோ. போஜகுமார் கூறியது:

"புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக கடந்த 1992-ம் ஆண்டில் இருந்தே போராடி வருகிறோம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இப்போதைய நிலை குறித்த தகவல்களைக் கேட்டுப் பெற்றுள்ளோம். அரசு முடிவெடுப்பதில் மட்டுமே தாமதம் இருப்பதாக அறிகிறோம்.

இதுபற்றி பரிசீலிக்கப்படும் என்று அண்மையில் குறிப்பிட்ட முதல்வர் கருணாநிதி, விரைவில் அரசாணை பிறப்பித்து பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT