அரியலூர், பிப். 13: அரியலூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டாலும், இங்கு இன்னமும் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படாதது பெருங்குறையாக உள்ளது. இதைக் கண்டித்து, அரியலூரில் மிகப் பெரிய அளவில் வழக்குரைஞர்களும், பொதுமக்களும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு செவி சாய்த்து மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூருக்கும், மக்களின் போராட்டத்துக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. உருவாக்கப்பட்ட மாவட்டத்தை பெரம்பலூருடன் இணைத்ததைக் கண்டித்து, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி மீண்டும் மாவட்டத்தைப் பெற்றனர் அரியலூர் மக்கள். அதேபோல, தற்போது மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகப்பெரிய அளவில் விசுவரூபம் எடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்த போது, திருச்சிக்கு அடுத்து நீதிமன்றம் இருந்தது அரியலூரில்தான். இங்குள்ள நீதிமன்றம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
அரியலூரில் தற்போது மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்டக் கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றம் என 5 நீதிமன்றங்கள் உள்ளன.
இதேபோல, ஜயங்கொண்டத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித் துறை நடுவர் நீதிமன்றம், நிலம் கையகப்படுத்துதல் வழக்குகளை விசாரிப்பதற்கு என 2 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.
2011, பிப்ரவரி மாதம் முதல் வாரக் கணக்கின்படி, அரியலூரில் உள்ள 5 நீதிமன்றங்களிலும் நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 21,358. இவற்றில் முக்கியமாக அசல் உரிமையியல் வழக்குகள் 2537-ம், விபத்து நஷ்டஈடு வழக்குகள் 1276-ம், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் 6527-ம், குடும்ப விவகார வழக்குகள் 162-ம், மேல் முறையீட்டு வழக்குகள் 4590-ம் நிலுவையில் உள்ளன.
மாவட்டத்தில் உரிமையியல், நீதித் துறை, விரைவு நீதிமன்றங்கள் இருந்த போதிலும் மாவட்ட நீதிமன்றம் இல்லாததால், கொலை வழக்குகள், பெரிய அளவிலான செஷன்ஸ் வழக்குகள், பிணையில் விடுவித்தல் தொடர்பான வழக்குகள், கூட்டுக் கொள்ளை, பெரிய அளவில் தண்டனை விதித்தல் தொடர்பான வழக்குகள், கிறிஸ்தவர்களின் விவாகரத்து சம்பந்தமான வழக்குகள், கிறிஸ்தவர்களின் உயில்களை உறுதி செய்தல் தொடர்பான வழக்குகள் எல்லாம் மாவட்ட நீதிமன்றத்தில்தான் விசாரிக்க முடியும்.
தற்போது, அரியலூரில் மாவட்ட நீதிமன்றம் இல்லாததால், இதுபோன்ற வழக்குகளுக்காக வழக்குரைஞர்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள், போலீஸôர், வழக்குத் தொடர்ந்தவர்கள், விசாரணைக்காகச் செல்ல வேண்டியவர்கள் என ஏராளமானோர் பெரம்பலூருக்குச் செல்ல வேண்டிய நிலை இதுநாள் வரை இருந்து வருகிறது.
குறிப்பாக, அரியலூர் மாவட்டத்தின் கடைப் பகுதியாக உள்ள காடுவெட்டியிலிருந்து ஒருவர் பெரம்பலூருக்கு 100 கி.மீ. தொலைவுக்குச் செல்ல வேண்டியுள்ளது. காலை சென்றால் மாலை வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதேபோல, ஜாமீன் வழக்குகளுக்காக தினந்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூருக்குச் செல்ல வேண்டியுள்ளது என்கின்றனர் வழக்குரைஞர்கள்.
அரியலூரில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க தங்களின் பரிந்துரை வேண்டும் என 2007, நவம்பர் 17 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு கோரியது. இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு கூடி மாவட்ட நீதிமன்றம் அமைக்க ஒப்புதல் அனுப்பி, அதற்குரிய ஒப்புதலை உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு அனுப்பிவைத்தது. ஆனால், அதன் பின்னர் நடந்தது என்னவென்று தெரியவில்லை. காரணமும் புரியவில்லை. 2007-ல் கேட்கப்பட்ட பரிந்துரைக்கான பதில் 2010-ல் தரப்பட்டதாகவும், இதனாலேயே மாவட்ட நீதிமன்றம் அமைவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டதோ எனக் கருத நேரிடுகிறது என்கின்றனர் அரியலூர் வழக்குரைஞர்கள். மாவட்ட நீதிமன்றம் அமைத்தால் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டியிருக்கும். இதற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே, அரசுக்குச் செலவினத்தை ஏற்படுத்தாமல் இருக்கும் பணியிடங்களை வைத்தே பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைகளையும் நாங்கள் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளோம் என்கின்றனர் அரியலூர் வழக்குரைஞர்கள்.
மாவட்டத்தைப் போராடிப் பெற்றது போல, மாவட்ட நீதிமன்றத்தையும் போராடி பெற்று விடுவோம். எங்களின் போராட்டத்துக்கு வணிகர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். மாவட்டமாக உருவாகியும் மாவட்ட நீதிமன்றம் இல்லாமல் இருப்பது வேதனையை அளிக்கிறது.
வழக்குரைஞர்களின் போராட்டத்துக்கு அரசு செவி சாய்த்து, அரியலூரில் மாவட்ட நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் வழக்குரைஞர்கள்.
3 ஆண்டுகளாக நீதிபதி இல்லாத நீதிமன்றம்:
அரியலூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக நீதிபதி இல்லை. இதனால், இந்த நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை மற்றொரு நீதிமன்ற நீதிபதிதான் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பணியிடத்தையும் விரைவாக நிரப்ப வேண்டும் என்பது வழக்குரைஞர்களின் எதிர்பார்ப்பு.
அரியலூர் நீதிமன்றக் கட்டடங்கள் பழைமையானதாகும். மழை பெய்தால் நீதிமன்ற வளாகத்துக்குள் தண்ணீர் எளிதாக வந்துவிடும். ஆவணங்களை பாதுகாப்பதற்குள் பெரும்பாடுபட வேண்டியிருக்கும். நீதிமன்ற வளாகத்தில் கழிப்பறை வசதி இல்லாதது நீதிமன்ற ஊழியர்கள் தரப்பில் மிகுந்த அவதியை ஏற்படுத்தியுள்ளது.
"போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் தானாக வர வேண்டும்'
அரியலூர், பிப்.13: போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் மாணவர்களிடம் தானாக வர வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், ஆலத்தூரில் உள்ள மெட்ராஸ் சிமென்ட்ஸ் நிறுவனத்தின் வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற 13-வது ஆண்டு விழாவில் பஙகேற்று, பரிசுகளை வழங்கிப் பேசியது:
இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களின் கையில்தான் உள்ளது. அனைவரும் சாதி, மதங்களைக் கடந்து நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும். மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்பது, கல்வியில் அனைத்து அடிப்படைகளையும் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாகும்.
போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் மாணவர்களிடம் தானாக வர வேண்டும். அவ்வாறு இருந்தால் நம்நாடு எதிர்காலத்தில் வல்லரசாக மாறும். எல்லா வகையிலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
மாணவர்கள் ஆசிரியர்களை முன்மாதிரியாக வைத்துப் படிக்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி முறைகளையும், பாடங்களையும் நன்றாகக் கற்பித்து, அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
விழாவில் பள்ளித் தாளாளர் மதன்மோகன், முதல்வர் ராதா ரவீந்திரன், மெட்ராஸ் சிமென்ட்ஸ் நிறுவனத் துணைத் தலைவர் சண்முகம், கோட்டாட்சியர் நிர்மலா, வட்டாட்சியர் செந்தாமரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.