திருச்சி

எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் முதல்வர் தொகுதி- மாவட்டம்!

திருச்சி, ஜூன் 19:மாநிலத்தின் மையமான திருச்சி மாவட்டம் இப்போது முதல்வர் ஜெ.  ஜெயலலிதா வென்ற ஸ்ரீரங்கம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டமாகியிருக்கிறது. ஏற்கெனவே, சில - பல இழப்புகளுடன் காட்சியளிக்கும் திருச்

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, ஜூன் 19:மாநிலத்தின் மையமான திருச்சி மாவட்டம் இப்போது முதல்வர் ஜெ.  ஜெயலலிதா வென்ற ஸ்ரீரங்கம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டமாகியிருக்கிறது. ஏற்கெனவே, சில - பல இழப்புகளுடன் காட்சியளிக்கும் திருச்சி, இப்போது கூடுதலான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறது.

  தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக திருச்சியை உருவாக்க முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆசைப்பட்டார் எனக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது அமைந்திருக்கும் அதிமுக அரசு, திருச்சியை இரண்டாவது தலைநகராக- அல்லது இணைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற ஆசை திருச்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பெரும்பாலான அமைப்புகளுக்கு இருக்கிறது.

  இந்த ஆசை சரியா, தவறா? என்ற கேள்விக்கு முன்னால், அந்த ஆசையின் அடிப்படைகள் என்னென்ன? என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று.

   திருச்சியிலிருந்து மாநிலத்தின் எந்த மூலைக்கும், எந்த நேரத்திலும் செல்ல முடியும். எங்கு செல்ல வேண்டுமானாலும், திருச்சி வந்து செல்லலாம் என்ற வசதிதான். இதையொட்டியே அரசியல் கட்சிகளின் மையப்படுத்திய பணிகள் எல்லாம் திருச்சியில்தான் பெரியார் காலம் தொட்டே இப்போதும் நடந்து வருகின்றன.

  ஆனால், என்ன கொடுமை? மக்கள் தொகைப் பெருக்கம் - வாகனப்  பெருக்கத்துக்கேற்ப விசாலமான பேருந்து நிலையம் இல்லை! ஆண்டாண்டு காலமாக முன்வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டம், எங்கெங்கோ சென்று கடந்த திமுக ஆட்சியில் பஞ்சப்பூரில் அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.

  ஆனால், என்ன மாயமோ அது, உடன் சென்ற "உயர்' அலுவலர்களே திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கெல்லாம் ராசியே இல்லை என்று சொன்னார்கள், அடுத்த சில நாள்களுக்குள்ளேயே. நடப்பது என்ன என்பது புரியவும் இல்லை.

  சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூருக்கு அடுத்துதான் திருச்சியில் அரசு மருத்துவமனைத் தரம்! தில்லியிலுள்ள "எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு நிகரான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்றார்கள். சேலத்துக்குப் போய், மதுரைக்குப் போய் எப்போது திருச்சி வரும்? என்பது பதில் கிடைக்காத கேள்வியாகவே மாறிவிட்டது.

  அதன்பிறகு, மாநில அரசு நிதியிலிருந்து தரம் உயர்த்தப் போகிறோம் என்ற குரல் கடந்த காலங்களில் கேட்டது. செயலில் எதுவும் குறிப்பிடத்தக்கதாக இல்லை. இன்னமும் அதிமுக்கிய அறுவைச் சிகிச்சைகளுக்கு மதுரை, சென்னையைத்தான் டாக்டர்கள் முன்மொழிகின்றனர்.

  அதேபோல, நோயாளிகளின் பெருக்கத்துக்கேற்ற படுக்கைகள், இடவசதி, டாக்டர்- செவிலியர் வசதியில்லை. வழக்கம்போல, சுகாதாரம் என்றால் என்ன விலை? என்பதும் கூடவே.

  இதைத் தாண்டி, திருச்சியில் பொழுதுபோக்க என்றால் கிழக்கே கல்லணை, மேற்கே முக்கொம்பு (மேலணை) மட்டுமே. இந்த இரு இடங்களும்கூட, ஏராளமான இட வசதியிருந்தும், போதிய வசதியின்றி பரிதாமாகத்தான் காட்சியளிக்கின்றன. அதைவிட்டால் மலைக்கோட்டை ஏறலாம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா சுற்றலாம்.

  பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வரும்போது(!) அதற்கருகே நான்கு வழிச் சாலையில் தனியார் யாரோ (?) பெரிய "தீம்பார்க்' அமைக்கவிருக்கிறார்கள் என்றார்கள். திருச்சி மாநகருக்குள் "வாட்டர் தீம் பார்க்' வருகிறது என்றார்கள். வரவே வராது என்றும் சொல்கிறார்கள்.

  டன் கணக்கில் குவியும் குப்பைகளை ஏதோ செய்கிறோம் என்று அவ்வப்போது சொல்கிறார்கள். எதுவும் செய்யவில்லை. ஒரு நேரத்தில் "குப்பை மலை'(!) உருவாக்கப் போகிறோம் என்றும் சொன்னார்கள்.

  மொத்த விற்பனை மார்க்கெட் நகருக்கு வெளியே போயாக வேண்டும். எல்லோருமே இதைத்தான் சொல்கிறார்கள், வெகுசிலரைத் தவிர. ஆனால், அது ஏனோ இடம் பெயரவே மறுக்கிறது.

  திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்குமான ஜவுளி, பாத்திரங்கள், நகைக் கடைகள் இங்கு நிரம்பியிருந்தும் வந்து வாங்கிச் செல்ல இரு சக்கர, நான்கு சக்கர நிறுத்துமிடங்கள் இல்லை. தெரியாமல் உள்ளே பெரிய வாகனத்தில் வந்துவிட்டால் அன்றைய "கொள்முதல்' கலவரம்தான்.

  நகருக்குள் நான்கு வழிச் சாலை கிடையாது என்பதுதான் நாடு முழுவதுமுள்ள வழக்கு. தஞ்சைச் சாலை மட்டும் திருச்சிக்குள் வந்ததெப்படி? மில்லியன் டாலர் கேள்வி. இதனால், பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை இருபுறமும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

  புறநகர்ப் பகுதிகளில் வாழைப்பழ ஜாம் தொழில்சாலை, வாசனை திரவிய தொழில்சாலை, காய்கறிகளைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு... என இன்னும் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் இருக்கின்றன.

  மோனோ ரயில் திட்டத்துக்கான ஆய்வும் திருச்சியில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதைக் கொண்டு வந்தால் "கோடிப் புண்ணியம்' என்பதுதான் போக்குவரத்து நெரிசல் தந்திருக்கும் படிப்பினை.  இப்போது விஷயத்துக்கு வருவோம். திருச்சியை இரண்டாவது அல்லது இணைத் தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னணியில் உள்ள ஆசைகள் எல்லாம் இவைதான்.

  திருச்சி மாவட்டம் இப்போது முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த மாவட்டமாகியிருக்கிறது. ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மட்டுமல்லா, மாவட்டத்துக்கும் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையும்

இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT