திருச்சி

ஒதுக்குதலால் பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள்!

திருச்சி, நவ. 16: எச்ஐவி- எய்ட்ஸôல் பாதிக்கப்பட்ட மற்றும் தொற்றுள்ள குழந்தைகள் பள்ளிகளில் ஆசிரியர்களின் ஒதுக்குதல் காரணமாக தங்களது கல்வியைத் தொடர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.  இந்தியாவில் அனைவருக்க

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, நவ. 16: எச்ஐவி- எய்ட்ஸôல் பாதிக்கப்பட்ட மற்றும் தொற்றுள்ள குழந்தைகள் பள்ளிகளில் ஆசிரியர்களின் ஒதுக்குதல் காரணமாக தங்களது கல்வியைத் தொடர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

 இந்தியாவில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கடந்த ஆண்டு, ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இதன் சட்ட விதிமுறைகளை தமிழக அரசு கடந்த சனிக்கிழமை வெளியிட்டது. இதன்படி, 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் பகுதியிலுள்ள பள்ளியிலேயே- தனியார் பள்ளியாக இருந்தாலும்- இலவச, கட்டாயக் கல்வியை அளிக்க வேண்டும்.

 இதில், மிகவும் பின்தங்கியவர்கள் என்று வகைப்படுத்தப்படும் பட்டியலில் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பள்ளிகளில் இடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால், எச்ஐவி- எய்ட்ஸ் தொற்றிய, பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பள்ளிகளில் ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் நிலை குறித்த எவ்வித எச்சரிக்கையும் இல்லாதது, இவர்களின் நிலையை வழக்கம் போலக் கேள்விக்குரியதாகவே வைத்திருக்கிறது.

 பெற்றோரிடமிருந்து எச்ஐவி தொற்றிய குழந்தைகள், பெற்றோர்களுக்கு தொற்றியதால் குடும்பச் சூழல் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என இரு வகையினர் பள்ளிகளில் ஒதுக்குதலுக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர்.

 இவர்களில் பலருக்கு கல்விக்கான நிதியை அரசு சார்பு அறக்கட்டளை வழங்கினாலும்கூட, இதுபோன்ற ஒதுக்குதல் காரணமாக இயல்பாகவே பெற்றோர் மனநிலை, கல்வி நிறுத்தம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறது.

 "சென்டர் பார் அட்வகேசி அண்டு ரிசர்ச்' என்ற தன்னார்வ அமைப்பு ஒன்று இதுபோன்ற குழந்தைகள் 50 பேரைக் கொண்டு ஓர் ஆய்வை அண்மையில் நடத்தியது. இந்த ஆய்வில், 50 சதக் குழந்தைகள் புறக்கணிப்புகளுக்குப் பயந்து தங்களின் எச்ஐவி நிலையை வெளிப்படுத்தாமல் உள்ளனர் என்றும், 34 சதம் குழந்தைகள் எச்ஐவி நிலையை வெளிக்காட்டியதால் புறக்கணிப்புகளைச் சந்தித்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

 நேரடியாகப் பள்ளிகளில் சேர்க்க மறுப்பு என்று இல்லாமல் சேர்ந்த பிறகு, தாமதமாக வந்தது, வீட்டுப் பாடம் செய்யாதது, சோர்ந்து இருப்பது, உடல் நலக் குறைவாக இருப்பது போன்ற காரணங்களைச் சொல்லி வெளியேற்றும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாகத் தெரிய வந்துள்ளது.

 திருச்சியில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து விளக்குகிறார், எச்ஐவியுடன் வாழ்வோர் கூட்டமைப்பின் தலைவி அ. தமிழ்:

 "திருச்சி மாநகரில் மேலப்புதூர் பகுதியில் உள்ள பள்ளியில் பெற்றோருக்கு எச்ஐவி உள்ளது என்பதை எப்படியோ தெரிந்து கொண்டு, ஒரு மாணவரை தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை எடுத்து வரச் சொல்லி துன்புறுத்துகின்றனர்.

 தண்டலைப்புத்தூர் பகுதியிலுள்ள ஓர் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவருக்கு பரிசோதனை செய்யச் சொல்லி பள்ளியிலிருந்தே கடிதம் கொடுத்தனர். இந்த விவகாரத்தை கல்வித் துறையின் உயர் அலுவலர்களுக்கு தெரிவித்த பிறகு, தற்போது பிரச்னை அமைதியாகியிருக்கிறது.

 முசிறி பகுதியில் 7-ம் வகுப்பு படித்த எச்ஐவி தொற்றுள்ள மாணவர் அங்கு நேரிட்ட பிரச்னைகளால் பள்ளிக் கல்வியை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

 அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த- எச்ஐவி பாதிக்கப்பட்ட மாணவியும் பள்ளிக் கல்வியை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 லால்குடி பகுதியில் பிளஸ் 1 படித்த- எச்ஐவி தொற்றுள்ள மாணவர் தனது பள்ளிப் படிப்பை நிறுத்தியிருக்கிறார். திருச்சி விமான நிலையம் பகுதியில் ஒரு பள்ளியில் படித்து இதுபோன்ற பிரச்னை ஏற்பட்ட இரு மாணவர்களை போராடி மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறோம்' என்றார் தமிழ்.

 கடந்த அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு பள்ளியிலும் இரு ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு எச்ஐவி- எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.

 எனவே, மீண்டும் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தினால், ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுவதுடன், இதுபோன்ற பிரச்னைகள் உருவாகும் போது, ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்களிடம் பேசி சரி செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார் தமிழ்.

 இத்துடன், இலவச- கட்டாயக் கல்விச் சட்டத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்ற வகைப்பாட்டில் எச்ஐவி தொற்றுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 5 சத ஒதுக்கீடு என்ற சட்டப்படியான பாதுகாப்பை முதல்வர் ஜெயலலிதா உறுதிப்படுத்த வேண்டும்; ஆந்திரத்தில் இதுபோன்ற நடைமுறை உள்ளது என்கிறார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT