பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறக்கப்படுமா?
பெரம்பலூர், செப். 20: பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் கிராமத்தில், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய குருக்களால் கட்டப்பட்ட புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளது. அந்த
பெரம்பலூர், செப். 20: பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் கிராமத்தில், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய குருக்களால் கட்டப்பட்ட புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளது.
அந்தத் தேவாலய வளாகத்திலேயே 100 ஆண்டுகள் பழைமையான ஆர்.சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு, தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக, பள்ளித் தாளாளர் அந்தோனி ஜோசப் முயற்சி மேற்கொண்டார்.
அதனடிப்படையில், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும், பள்ளியின் பங்குத்தொகையாக, மூன்றில் ஒரு பங்குத் தொகையான ரூ. 3.65 லட்சத்தை பள்ளித் தாளாளர் அந்தோனி ஜோசப், கிராமப் பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களிடம் வசூலித்து அளித்ததைத் தொடர்ந்து, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட நிதியைக்கொண்டு, கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
கட்டடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அதிக அளவு பாறைகள் இருந்ததால், அஸ்திவாரம் அமைப்பதற்கே பல லட்சம் செலவழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கூடுதலாக 2 அறைகளைச் சேர்த்து 6 வகுப்பறைகளைக் கொண்ட கட்டடம் கட்டுவதற்கு பள்ளி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது.
மேலும், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பல முக்கியப் பிரமுகர்களிடம் கட்டுமானப் பணிக்குத் தேவையான தொகை வசூலிக்கப்பட்டு, ரூ. 25 லட்சத்தில் 6 வகுப்பறைகளுடன் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமியால் புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.
ஆனால், ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு பள்ளி திறக்கப்பட்டும், புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறக்கப்படாமலேயே உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தோர் கூறியது:
புனித சூசையப்பர் தேவாலயம் மற்றும் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி அமைந்துள்ள சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான நிலம் நத்தம் புறம்போக்கில் உள்ளதாகவும், புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்துக்கு அனுமதி கேட்டு குரும்பலூர் பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்ற போது, நிலத்தின் பட்டாவுடன் விண்ணப்பித்தால் அதற்கான அனுமதி உடனடியாக அளிக்கப்படும் என செயல் அலுவலர் கூறினாராம். பட்டா இல்லாததால் அனுமதி பெற முடியவில்லை.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, அதே புறம்போக்கு நிலத்தில்தான் வகுப்பறைகள் கட்டப்பட்டன. அதற்கு பேரூராட்சி நிர்வாகம் எவ்வித பட்டாவும் கேட்காமல் அனுமதி அளித்தது. அதே வளாகத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளுக்கு அனுமதி தர மறுக்கப்படுகிறது.
இதனால், புதிய கட்டடத்துக்கு உறுதிச் சான்றிதழ், உரிமச் சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் பெற முடியாத நிலையில் பள்ளி நிர்வாகம் உள்ளது.
எனவே, பள்ளி மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தைத் திறக்க மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.