எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்படுமா?
பெரம்பலூர், மார்ச் 18: பெரம்பலூரில் ரூ. 1.68 கோடி மதிப்பீட்டில் ஒளி உமிழும் டையோடு (எல்.இ.டி) தொழில்நுட்பத்துடன் கூடிய மின் விளக்குகளை, கம்பத்தில் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர
பெரம்பலூர், மார்ச் 18: பெரம்பலூரில் ரூ. 1.68 கோடி மதிப்பீட்டில் ஒளி உமிழும் டையோடு (எல்.இ.டி) தொழில்நுட்பத்துடன் கூடிய மின் விளக்குகளை, கம்பத்தில் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர் நகரில் உள்ள பிரதான சாலைகளான பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளான துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான வீதிகளை அழகுபடுத்துவதோடு, வெளிச்சத்தை ஏற்படுத்தவும், இரவு நேர வாகன ஓட்டுநர்களின் வசதிக்காகவும் சாலையின் மையப் பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு, அதில் அதிகளவு வெளிச்சத்தை ஏற்படுத்தும் சோடியம் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சோடியம் மின் விளக்குகள், அதிக மின்சாரத்தை எடுத்துக் கொண்டு 250 வாட்ஸ் வெளிச்சத்தை மட்டுமே அளிக்கின்றன. இதனால், நகராட்சி நிர்வாகத்தின் பெரும்பாலான வருவாயை, மின் வாரிய அலுவலகத்துக்கு செலுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது.
அதிகளவு மின்சார பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், 75 வாட்ஸ் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தை ஏற்படுத்தக்கூடிய எம்டிங் டையோடு எனப்படும் (எல்.இ.டி) ஒளி உமிழும் மின் விளக்குகள் தற்போது புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த எல்.இ.டி விளக்குகள், முதன் முதலாக சென்னையில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த மின் விளக்கு ஒன்றின் விலை ரூ. 64 ஆயிரம் என்றும் கூறப்படுகிறது. மின் தட்டுப்பாடு உள்ள நிலையில், குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் பெறுவதற்காகவும், மின் கட்டணத்தைக் குறைப்பதற்காகவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சரும், பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான து. நெப்போலியன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்த ரூ. 47.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதி மூலம், பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து, துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்பு வரை சாலையின் மையப்பகுதிகளில் உள்ள தடுப்பு சுவர்களில் எல்.இ.டி மின் விளக்குகள் பொருத்துவதற்கான மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, மாநிலங்களவை உறுப்பினர் ஆ. இளவரசன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதியிலிருந்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, மதரஸô சாலை வரையிலும், அரணாரை பகுதியிலிருந்து துறையூர் சாலை வரையிலும் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான கம்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பெரம்பலூர் நகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சோடியம் மற்றும் டியூப் லைட்டுக்களை அகற்றி, எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்த முதல் கட்டமாக ரூ. 82 லட்சம் மதிப்பில் பெரம்பலூர் பாலக்கரை முதல் சங்குப் பேட்டை வரையிலும், வடக்குமாதவி பிரிவு சாலை முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரையிலும் உள்ள சோடியம் மின் விளக்குகளை அகற்றி, எல்.இ.டி விளக்குகள் பொருத்தவும், சாலையின் ஒரங்களில் மின் கம்பங்களின் பொருத்தப்பட்டுள்ள 213 டியூப் லைட்டுகளை அகற்றி, அதில் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் நகரின் பிரதான பகுதிகளில் ரூ. 1.75 கோடி மதிப்பில் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், நகர மக்களும், வாகன ஓட்டுநர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்பு வரை சாலையின் மையப் பகுதிகளில் உள்ள தடுப்புச் சுவர்களில் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவதற்கான மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்த நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதேபோல, அரணாரை பகுதியில் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கம்பங்களிலும் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தவில்லை. இதனால், சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கம்பங்கள் சேதமடைந்து வருவதோடு, இத் திட்டமும் கிடப்பில் போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மின் செலவினத்தைக் குறைக்க தற்போது அமைக்கப்பட்ட கம்பங்களில் மின் விளக்குகளைப் பொருத்தவும், பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு நகரின் பிரதான பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகளை அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.