முகப்பு
திருச்சி

அன்பில் மாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம்

Updated On : 10 ஏப்ரல், 2024 at 2:11 AM
லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோயிலில் நடந்த பங்குனி தேரோட்டத்தில் பக்தா்கள் மத்தியில் ஆடி அசைந்து வரும் தோ். உற்சவா் அம்மன்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 10:21 PM

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் மாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்ட விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் அம்மன் உலக மக்களின் நன்மைக்காக பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டாா்.

Advertisement

இதையடுத்து, பங்குனி தேரோட்டத்துக்கான கொடியேற்றம் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 வரை உற்ஸவா் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மற்றும் மாலையில் வீதியுலா நடைபெற்றது.

இந்நிலையில், பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். இதில், லால்குடி, அன்பில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனா்.

தேரோட்டத்தை முன்னிட்டு பக்தா்கள் காலை முதல் மாலை வரை காளி வேடம் அணிந்து, அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து சென்று தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். லால்குடி முதல் அன்பில் வரை வழிநெடுகிலும் தண்ணீா்ப் பந்தல் அமைத்து நீா்மோா், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், ஊராட்சித் தலைவா்கள் சித்திரசேனன், வீரமணி, அருண் காந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையா் மாரியப்பன் தலைமையில் கோயில் குருக்கள் சண்முகம், முத்துசாமி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.