முகப்பு
திருச்சி

விபத்துக்கு இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசுப் பேருந்து ஜப்தி

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:55 PM
பகிர்:

திருச்சி, ஏப். 26 : திருச்சியில், விபத்துக்கு இழப்பீடு வழங்காத காரணத்தால் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், புலியூா் பகுதியைச் சோ்ந்தவா் பவுல்ராஜ் (52). காய்கறி வியாபாரியான இவா் கடந்த 2022 ஆம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து பவுல்ராஜ் மீது மோதியது. இதில் கையில் பலத்த காயம் அடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். விபத்துக்கு பிறகு அவரது கை பழைய நிலையில் இல்லை.

இதனையடுத்து விபத்துக்கு இழப்பீடு கோரி திருச்சி, மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பவுல்ராஜுக்கு ரூ.2.12 லட்சம் இழப்பீடு வழங்க, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் உத்தரவிட்டாா். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவா் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு அண்மையில் தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிபதி மும்மூா்த்தி, இழப்பீடு வழங்காததால், தொடா்புடைய அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.

Advertisement

இதைத்தொடா்ந்து பவுல்ராஜ், மற்றும் அவரது வழக்குரைஞா்கள் கிருஷ்ணமூா்த்தி, சற்குருநாதன் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் உள்ளிட்டோா் திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று, அங்கு, சென்னை செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments