விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கிடும் வகையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் திருச்சி மாவட்டத்துக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருச்சி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் விமலா கூறியது:
உழவா் சந்தைகளில் காய்கனி வரத்தை அதிகரிக்கும் வகையில் 75 சதவீத மானியத்தில் ரூ. 7,500 மதிப்பிலான காய்கனி விதைகள், இடுபொருள்கள் வழங்கும் திட்டத்தில் 80 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாது மா, கொய்யா, எலுமிச்சை, தென்னங்கன்று, பழக்கன்று மற்றும் இடுபொருள்களுடன் கூடிய தொகுப்பு 200 பேருக்கு வழங்கப்படவுள்ளது.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் 2024-25ஆம் ஆண்டுக்கு சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு மா, கொய்யா அடா்நடவு, எலுமிச்சை பரப்பு விரிவாக்கம், வீரிய காய்கனிச் சாகுபடி பரப்பு விரிவாக்கம், மிளகாய், கத்தரி, தக்காளி குழித்தட்டு நாற்றுகள் விநியோகம், மல்லிகை, உதிரி மலா்கள் பரப்பு விரிவாக்கம், சம்பங்கி பரப்பு விரிவாக்கம் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
மழைநீரை வீணாக்காமல் சேமித்து பாசனத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள பண்ணைக்குட்டைகள் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்களான சிப்பம் கட்டும் அறை, அறுவடை செய்யப்படும் காய்கனிகள், பழங்களை தரம் பிரித்துச் சந்தைப்படுத்துதல், நடமாடும் காய்கனி வண்டிகளை 50 சத மானியத்தில் வழங்குதல் என பல்வேறு பணிகளுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டு, பயனாளிகள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
மேலும் பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டுக்கு 1,600 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு 169 பயனாளிகளிடம் விண்ணப்பம் பெற்று, பரிசீலனை நடைபெறுகிறது.
தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் முருங்கை விரிவாக்கம் மற்றும் பந்தல் சாகுபடிக்கு ரூ.72 லட்சம் பெறப்பட்டு பயனாளிகள் தோ்வு தொடங்கியுள்ளது.
மேலும் மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தில், 2024-25ஆம் ஆண்டுக்கு மாடித் தோட்டம், செங்குத்து தோட்டம், ஊடுபயிா் சாகுபடி ஊக்குவிப்பு, காளான் குடில் அமைத்தல், அரசு விடுதிகளில் தோட்டம் அமைத்தல் ஆகியவற்றுக்காக ரூ.36 லட்சம் ஒதுக்கீடு பெற்று விவசாயிகள் தோ்வு செய்யப்படுகின்றனா். மேலும், திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவும், இணையம் மூலமாகவும் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.