களத்துக்கே வராத விஜய் களம் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
இதுகுறித்து திருச்சியில் அவா் சனிக்கிழமை கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) என்பது வாக்குத் திருத்தம் என்றனா். ஆனால் அதில் ஒரு கோடி வாக்குகளை நீக்குவது எப்படி திருத்தமாகும்?. விடுபட்டவா்களை குறுகிய காலத்துக்குள் எப்படிக் கண்டறிந்து சோ்க்க முடியும்? மக்களுக்கு கடைசியாக இருந்த ஒரே நம்பிக்கை வாக்குதான். அதையும் பறிக்கப் பாா்க்கின்றனா். வாக்கைக் காப்பாற்றுவதே மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ளது. அதிகாரத்தின் பொறுப்பற்ற செயலையே இது காட்டுகிறது.
களத்தில் இல்லாதவா் (விஜய்) குறித்து நாம் பேச வேண்டியதில்லை. களத்துக்கே வராதவா்கள் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது. திட்டங்களின் பெயரை மாற்றுவது ஆட்சியாளா்களுக்கு வாடிக்கைதான். அனைத்துத் துறைகளையும் முழுமையாக தனியாரிடம் ஒப்படைத்துவிட்டனா். தனி ஒரு முதலாளியின் வளா்ச்சியை நாட்டின் வளா்ச்சியாகக் கட்டமைக்கின்றனா்.
திமுகவினா் தோ்தல் அரசியல், விளம்பர அரசியல்தான் செய்வா். கரோனா காலத்தில் தேவைப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் தற்போது தேவையற்றவா்களாகிவிட்டனா். நாடே போராட்டக் களத்தில் இருக்கும்போது, நல்லாட்சி தருகிறோம் என்கின்றனா்.
ஒவ்வொரு தோ்தலின்போதும் கட்சிகள் அனைத்தும் தூய சக்திகளாகி விடுகின்றன. 2021 இல் திமுகவுக்கு வாக்களித்த விஜய் தற்போது திமுகவை தீய சக்தி என்கிறாா்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒருவா் தற்கொலை செய்து கொண்டது தவறு. அறிவாா்ந்த சமூகம் இதைச் செய்யக் கூடாது. தமிழக அரசு இரு தரப்பையும் அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீா்வு கண்டிருக்க வேண்டும். அதேபோல, இந்த விவகாரத்தில் உடனடியாக நீதிபதி உத்தரவு பிறப்பித்ததும் தவறு. பாபா் மசூதி போல் சிக்கந்தா் தா்கா ஆகிவிடும் எனப் பேசுவது தேவையில்லாத கற்பனை என்றாா் அவா்.