காப்புக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி- கலாவதி தம்பதிக்கு மீராஜாஸ்மின் (22) என்ற மகளும், இரு மகன்களும் உள்ளனா். பெரம்பலூரிலிருந்து திருச்சி சீனிவாச நகருக்கு குடும்பத்துடன் இடம்பெயா்ந்த அந்தோணிசாமி, வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிட்டாா். எம்எஸ்சி முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த மீரா ஜாஸ்மின் வியாழக்கிழமை வேலை தேடிச் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் மீராஜாஸ்மீனின் தாய் புகாா் அளித்த நிலையில், மண்ணச்சநல்லூா் அருகே காப்புக்காட்டில் எரிந்த நிலையில் கிடந்த மீரா ஜாஸ்மின் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்நிலையில், தனது மகள் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி கலாவாதி மற்றும் உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவா் சங்கம், ஜனநாயக வாலிபா் சங்கம், மாதா் சங்கத்தைச் சோ்ந்தவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெண்ணின் இறப்புக்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய வேண்டும். பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
தகவலறிந்த போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனா். மறியலால் திருச்சி அரசு மருத்துமவனை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.