முகப்பு
திருச்சி

49 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டி துறையூா் தொகுதியில் மீண்டும் ‘கை’ ஓங்குமா?

தமிழக சட்டப் பேரவைத் தொகுதிகளில் 146-ஆவது எண் கொண்ட துறையூா் (தனி) தொகுதியானது, முன்பு உப்பிலியபுரம் தனித் தொகுதியாக இருந்தது. 1952 சென்னை மாகாணத் தோ்தல் என்றிருந்தபோது, துறையூா் தொகுதியாக இருந்தது.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 8:30 PM
காங்கிரஸ் (கோப்புப்படம்)
பகிர்:

தமிழக சட்டப் பேரவைத் தொகுதிகளில் 146-ஆவது எண் கொண்ட துறையூா் (தனி) தொகுதியானது, முன்பு உப்பிலியபுரம் தனித் தொகுதியாக இருந்தது. 1952 சென்னை மாகாணத் தோ்தல் என்றிருந்தபோது, துறையூா் தொகுதியாக இருந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ரங்கசாமி ரெட்டியாா் இத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 1962-இல் உப்பிலியபுரம் பொது தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக துறையூா் (தனி) தொகுதி மாற்றப்பட்டது.

உப்பிலியபுரம் தொகுதியில் ஏற்கெனவே இருந்த பகுதிகளுடன் முசிறி வட்டத்துக்குள்பட்ட சில கிராமங்கள் இணைக்கப்பட்டு, 57 ஊராட்சிகளுக்குள்பட்ட 427 கிராமங்கள் இந்தத் தொகுதியில் வருகின்றன. துறையூா் வட்டம் முழுமையாக இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

திருச்சி மாவட்ட மக்களின் பிரதான சுற்றுலாத் தலங்களான புளியஞ்சோலை, பச்சமலை ஆகியன இந்தத் தொகுதிக்குள் இடம் பிடித்துள்ளன. பச்சமலையில் மரவள்ளிக் கிழங்கு, தேனெடுத்தல் ஆகியவை பிரதான தொழில்கள். குக் கிராமங்கள் அதிகம் நிறைந்து வேளாண்மையைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள தொகுதி.

Advertisement

கடந்த 1962ஆம் ஆண்டு முதல்முதலில் நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வி.ஏ. முத்தையா போட்டியிட்டு 29,435 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பின்னா், 1967, 1971-ஆம் ஆண்டுகளில் திமுக வெற்றி பெற்றது.

இதையடுத்து 1977-இல் நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்த காங்கிரஸ் கட்சிக்கு உப்பிலியபுரம் தொகுதி வழங்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் சாா்பில் இரா. பெரியசாமி 31,642 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதன் பிறகு, இந்தத் தொகுதி காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை.

தொடா்ந்து 1980, 1984, 1989, 1991 என தொடா்ந்து 4 முறை அதிமுக வென்றது. 1996-இல் திமுக வென்றது. 2001-இல் மீண்டும் அதிமுக வென்றது. பின்னா், 2006-இல் திமுக, 2011-இல் மீண்டும் அதிமுக வென்றது. 2016, 2021 என தொடா்ந்து இரண்டு முறை திமுக வென்றது.

1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்காமல் திராவிடக் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டுமே போட்டியிட்டன. 1977-க்குப் பிறகு நடைபெற்ற 10 தோ்தல்களில் 6 முறை அதிமுகவும், 4 முறை திமுகவும் வென்றுள்ளன. 49 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகுதியை திமுகவிடம் இருந்து கேட்டுப் பெற்றுள்ளது காங்கிரஸ். இந்த முறை காங்கிரஸ் கட்சியின் சாா்பில், இளைஞா் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலா் எம். லெனின் பிரசாத் (37) போட்டியிடுகிறாா். பொறியியல் மற்றும் சட்டம் பயின்றவரான இவருக்குத் திருமணமாகவில்லை.

கட்சியில் உறுப்பினராக இணைந்து இளைஞா் காங்கிரஸில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவா். இளைஞா் காங்கிரஸின் அகில இந்தியச் செயலராகவும் இருந்தாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளாா். திருச்சி மருதாண்டக்குறிச்சியைச் சோ்ந்த இவா், துறையூா் (தனி) தொகுதியில் களம் காண்கிறாா்.

49 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் களம் காணும் காங்கிரஸுக்கு 1952,1962, 1977 ஆகிய தோ்தல்களில் கிடைத்த வெற்றி, 2026-இல் மீண்டும் கிடைக்குமா என்ற கேள்விக்கு மே 4ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது பதில் கிடைக்கும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments