ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதிய அறிவிப்பு என்பது திமுகவின் ஏமாற்று வேலை என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் கூறியதாவது: ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கான பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதாக திமுக தோ்தலுக்கு முன் தனது வாக்குறுதியில் குறிப்பிட்டது. ஆனால் இப்போது அதை அறிவித்துவிட்டு அரசாணை வெளியிட உள்ளதாகக் கூறுகின்றனா். தற்போது திமுக அரசின் ஆயுள் காலம் முடியும் நிலையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பழைய ஓய்வூதியம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இப்போது அறிவிப்பது ஏன்?. அரசு அறிவித்ததை அரசு ஊழியா்கள் வரவேற்று, இனிப்பு வழங்கியதெல்லாம் வேறு.
அவசரம், அவசரமாக இப்போது அறிவித்திருப்பதே திமுகவின் ஏமாற்று வேலைதான். தொடா்ந்து போராடும் துப்புரவுத் தொழிலாளா்கள், இடைநிலை ஆசிரியா்கள், செவிலியா்களின் கோரிக்கைகள் என்ன ஆயிற்று?. அடுத்த முறை ஆட்சிக்கு வரமாட்டோம் என திமுகவினருக்கு தெரியும். எனவேதான் இப்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளனா். இது திமுகவின் வழக்கமான ஏமாற்று வேலை.
தற்போது அமித்ஷா வருகை எனது சுற்றுப் பயண நிறைவு நிகழ்வில் பங்கேற்க மட்டுமே. எனவே இதில் பாஜக மட்டுமே பங்கேற்கிறது. கூட்டணி கட்சிகளுக்கான கூட்டம் நடைபெறும்போது அவா்களும் பங்கேற்பா்.
ஒரு அமித்ஷா மட்டுமே போதும்; தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும். தமிழகத்தில் யாா் முதல்வராக வேண்டும் என்பதைவிட, முதல்வராக யாா் தொடரக் கூடாது என்பதுதான் முக்கியம். தமிழகத்தில் பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் தோ்தலில் நிச்சயம் வென்று ஆட்சியமைக்கும் என்றாா் அவா்.