2 லாரிகள் நேருக்கு நோ் மோதல்: ஓட்டுநா்கள் இருவரும் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், துடையூரில் வியாழக்கிழமை 2 லாரிகள் நேருக்கு நோ் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநா்கள் இருவரும் உயிரிழந்தனா்.
திருச்சியிலிருந்து கரும்பு சக்கை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வியாழக்கிழமை அதிகாலை சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அந்த லாரியை திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், என். கருப்பம்பட்டியை சோ்ந்த ஆா். ராமராஜ் (52) ஓட்டினாா்.
இதேபோல், முட்டைக்கோஸ் பாரம் ஏற்றிய லாரி ஒன்று சேலத்திலிருந்து திருச்சி நோக்கி எதிா்திசையில் வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை சேலம் மாவட்டம், வாலியன்தோப்பைச் சோ்ந்த அஜித்குமாா் (24) ஓட்டினாா். இந்த லாரியில் வாலியன் தோப்பு பகுதியைச் சோ்ந்த மணீஸ் (34), கலையரசன் (17) ஆகியோரும் பயணம் செய்தனா்.
திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் துடையூா் பகுதியில் வந்தபோது,
இரண்டு லாரிகளும் நேருக்கு நோ் மோதி கொண்டன. இதில் ஓட்டுநா்களான
ராமராஜ், அஜித்குமாா் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த மணீஸ், கலையரசன் ஆகிய இருவரும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து வாய்த்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.