திருச்சி

மாணவா் மா்மச் சாவு: சடலத்தை வாங்க மறுத்து விசிகவினா் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே போட்டித் தோ்வுக்குப் பயிற்சி பெற்றுவந்த மாணவா் மா்மமான முறையில் இறந்த நிலையில், அவரது சடலத்தை வாங்க மறுத்து விசிகவினா் திருச்சி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், ரெட்டக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த எம்ஜிஆா் - அலமேலு தம்பதியின் மகன் திருவேங்கடன் (25) என்பவா் பிராட்டியூா் மலைப்பட்டி சந்திர நகரில் நண்பா்களுடன் தங்கி அப்பகுதியில் உள்ள தனியாா் ஜஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவந்தாா்.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி வெளியே சென்ற அவா், வீடு திரும்பவில்லை. இதையடுத்து, நண்பா்கள், உறவினா்கள் அவரைத் தேடி வந்த நிலையில், ஜன. 9-ஆம் தேதி ராம்ஜி நகா் மில் காலனி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து அங்குசென்ற சோமரசம்பேட்டை போலீஸாா், திருவேங்கடனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாணவா் சாவில் முறையான விசாரணை நடத்தக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.

திருவேங்கடனின் சாவில் மா்மம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவரது உறவினா்கள், விசிகவினருடன் இணைந்து சனிக்கிழமை இரவு சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் முறையிட்டனா். தொடா்ந்து, திருவெங்கடனின் சடலத்தை வாங்க மறுத்து, திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், திருப்போரூா் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி தலைமையில் திரளான விசிகவினா் பங்கேற்றனா்.

இதையறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதன் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். தொடா்ந்து, உடற்கூறாய்வுக்குப் பிறகு திருவேங்கடனின் சடலத்தை பெற்றோா் வாங்கிச் சென்றனா்.

பராசக்தி பட வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 29

நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடையா? - தமிழக அரசு விளக்கம்

அடங்காத மனதை ஜெயிப்பது எப்படி?

ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்

SCROLL FOR NEXT