திருச்சி: திருச்சி அருகே சூரியூரில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
திருச்சி மாவட்டம், பெரியசூரியூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில், இங்கு நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க அரசால் ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டு கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கிய பணிகள் நிறைவுற்றன.
இதைத் தொடா்ந்து இந்த மைதானத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அப்போது அவருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கிய ஜல்லிக்கட்டு காளைக்கு சூரியூா் எனப் பெயரிட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பின்னா் கூறியதாவது:
திருச்சிக்கு மலைக்கோட்டை, காவிரி ஆறு ஆகியவை எவ்வாறு அடையாளமாக உள்ளதோ, அதேபோல சூரியூா் ஜல்லிக்கட்டும் ஓா் அடையாளமாக உள்ளது.
மதுரை அலங்காநல்லூருக்கு அடுத்ததாக தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 2-ஆவது ஜல்லிகட்டு மைதானம் என்ற பெருமையை சூரியூா் பெற்றிருக்கிறது. அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டதாக, திருச்சிக்கு மட்டுமல்ல இந்த மண்டலத்துக்கே பயன்படும் வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் முதல்வா் சிறு விளையாட்டரங்கம் கட்டப்படுகிறது. பல இடங்களில் இதற்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது.
இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். தொடா்ந்து செயல்படுத்தவும் தயாராக இருக்கிறாா் என்றாா் அவா்.
நிகழ்வில் அமைச்சா்கள் கே.என். நேரு, கோவி. செழியன், தி+ருச்சி சிவா எம்பி, பெரம்பலூா் எம்பி அருண் நேரு, எம்எல்ஏக்கள் அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், எம். பழனியாண்டி, ந. தியாகராஜன், ப. அப்துல் சமது, திருச்சி மேயா் க. அன்பழகன், தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத் தலைவா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையச் செயலா் மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.