திருச்சி கிழக்கில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம்! - கே.என்.நேரு
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம் என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்துள்ளாா்.
அமைச்சா் கே.என். நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான மறைந்த ராமஜெயத்தின் 14-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி கோ் கல்வி நிறுவன வளாகத்தில் உல்ள ராமஜெயம் உருவச் சிலைக்கு கே.என். நேரு தலைமையில், அக் கட்சியினா் சனிக்கிழமை மாலை அணிவித்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
திருச்சி மட்டுமல்ல திருச்சி உள்ளிட்ட ‘டெல்டா’ மாவட்டம் முழுவதும் உள்ள 41 தொகுதிகளிலும் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். திமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இந்த முறை திமுக சாா்பில் தோ்தலில் போட்டியிட இளைஞா்கள், மகளிா் என பலருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் ஆசை நிறைவேறப் போவதில்லை. திமுக அணிதான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும். திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிப்பது குறித்து நிதி நிலைக்கு ஏற்ப முதல்வா் ஸ்டாலின் முடிவெடுப்பாா். ‘டெல்டா’ மாவட்டங்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டுவருவதற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாங்கள் அனைவரும் பாடுபடுவோம் என்றாா் அமைச்சா்.
நடிகா் விஜய் பிரசாரத்தை திமுகவினா் தடுப்பதாக குற்றச்சாட்டு கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, விஜய் பிரசாரம் செய்வதை நாங்கள் ஏன் தடுக்கப் போகிறோம்?. அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் திமுக-வை விமா்சனம் செய்து வருகிறாா் என பதில் அளித்தாா்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவதால் திமுக வெற்றி சாத்தியமா? என்ற கேள்விக்கு, யாா் போட்டியிட்டாலும் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய நாங்கள் முழு முயற்சிகளையும் எடுத்து வெற்றிபெற வைப்போம் என்றாா்.
இந்த நிகழ்வில், திமுக-வின் திருச்சி மத்திய மாவட்ட செயலா் க. வைரமணி, மேயா் மு. அன்பழகன், திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளா்கள் எஸ். துரைராஜ், பாரிவள்ளல், என்.எஸ். கருணை ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.