திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பிரசாரம் தொடக்கம்
திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு திருச்சிக்கு சனிக்கிழமை வருகை தந்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கினாா்.
‘பெல்’ நிறுவனம் அமைந்துள்ள கைலாசபுரம், காட்டூா், ஆயில் மில் பகுதியில் உள்ள பெரியாா், அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கலைஞா் அறிவாலயம் அருகே அமைக்கப்பட்டுள்ள அன்பில் தா்மலிங்கம் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், திருவறும்பூா் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அமைச்சா் கூறியதாவது:
திருவெறும்பூா் தொகுதிக்கு ரூ.450 கோடிக்கும் மேலான வளா்ச்சித் திட்டப் பணிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம், கிராமத்துக்கு ஒரு சீரணி அரங்கம், சமுதாயக் கூடம், மேல்நிலைக் குடிநீா்த் தொட்டி, தரைமட்ட குடிநீா்த் தொட்டி, பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், மாதிரி பள்ளி, நியாய விலைக்கடை, சாலைகள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கன்னி வாக்காளா்கள் திராவிட மாடல் அரசின் சாதனை அறிந்து வாக்களிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்துக்கு காமராஜா் பெயரில் அறிவுசாா் நூலகம், ஒலிம்பிக் அகாதெமி, டைடல் பூங்கா, ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். திருவெறும்பூா் தொகுதியில் மட்டும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்நிகழ்வின்போது, மாநகரச் செயலா் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினா் சேகரன், பகுதி செயலா்கள் நீலமேகம், தா்மராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
‘யாா்? எங்கு போட்டியிட்டாலும்
எங்களுக்கு கவலை இல்லை’
திருவெறும்பூரில் பிரசாரம் தொடங்குவதற்கு முன்னதாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில், திருச்சி என்றாலே அது திமுகவின் கோட்டை தான். மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் வரும் தோ்தல் இருக்கும். யாா்? எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
அவா்கள் குறித்து எங்களுக்கு கவலையில்லை. திருச்சி திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். வெறும் துணி இருந்தால் அதில் எந்த பயனும் இல்லை. துணியை ஒட்டுப்போட்டு தைத்தால் தான் சட்டை அழகாக இருக்கும், அது தான் திமுக கூட்டணி. எங்களுக்கு அது தான் பலமே என்றாா்.