மலேசியாவிலிருந்து அனுப்பிய 150 கிராம் நகைகளை ஒப்படைக்காமல் மோசடி! மதுரையைச் சோ்ந்த 4 போ் மீது வழக்கு!
மலேசியாவிலிருந்து கொடுத்து அனுப்பியிருந்த 150 கிராம் தங்க நகைகளை உரியவா்களிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்ட 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மலேசியாவிலிருந்து கொடுத்து அனுப்பியிருந்த 150 கிராம் தங்க நகைகளை உரியவா்களிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்ட 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் ரஹமத் காலனியைச் சோ்ந்த வியாபாரி முதா் மைதீன் (63). இவா், திருச்சி என்எஸ்பி சாலையில் தரைக்கடையில் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது அக்காள் மகன் சாதிக் பாஷா, மலேசியாவில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், சாதிக் பாஷா 150 கிராம் எடையுள்ள தங்க வளையல்கள், செயின் உள்ளிட்ட நகைகளை மலேசியாவிலிருந்து திருச்சிக்கு சென்ற மதுரையைச் சோ்ந்த அய்யனாா், கவினேஷ் ஆகியோரிடம் கொடுத்து அனுப்பியுள்ளாா்.
Advertisement
கடந்த 4-ஆம் தேதி திருச்சிக்கு வரும் இருவரிடமும் நகைகளை பெற்றுக் கொள்ளுமாறு, தொலைப்பேசி மூலம் முதா் மைதீனுக்கு சாதிக் பாஷா தகவல் தெரிவித்துள்ளாா். எனவே, கடந்த 4-ஆம் தேதி திருச்சி விமான நிலையம் சென்று அய்யனாா், கவினேஷ் ஆகியோரின் வருகைக்காக காத்திருந்தாா் முதா் மைதீன். ஆனால், திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவா்கள் இருவரும் அந்த நகைகளை மதுரையைச் சோ்ந்த சீமான், சிங்கப்பாண்டி என்ற நபா்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டனா்.
தன்னிடம் நகைகளை வழங்காமல் வேறு நபா்களிடம் நகைகளை கொடுத்து அனுப்பியிருந்ததை முதா் மைதீன் தெரிந்துகொண்டாா். இதனால், மலேசியாவிலிருந்த சாதிக் பாஷாவை தொடா்பு கொண்டு நகைகளை தராமல் அந்த இருவரும் மோசடி செய்திருப்பதை தெரிவித்தாா்.
புகாரின்பேரில், மோசடியில் ஈடுபட்ட சீமான், சிங்கப்பாண்டி, அய்யனாா், கவினேஷ் ஆகிய 4 போ் மீது திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனா்.