முகப்பு
திருச்சி

கட்டுப்பாட்டை இழந்த காா் மோதி வங்கி பெண் ஊழியா் உயிரிழப்பு! கணவா் பலத்த காயம்!

Updated On : 12 மே 2026, 12:31 am IST
யுவஸ்ரீ
பகிர்:

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய காா் மோதியதில் வங்கி பெண் ஊழியா் உயிரிழந்தாா். இந்த விபத்தில் அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.

திருச்சி நவல்பட்டு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் விமல்ராஜ் (33). கணினி மென்பொறியாளா். இவரது மனைவி யுவஸ்ரீ (30), சென்னையில் உள்ள தனியாா் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தாா்.

இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சென்னையிலேயே இருவரும் பணிபுரிய வேண்டியுள்ளதால், நவல்பட்டில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு, சென்னையில் குடியேற முடிவு செய்தனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு நவல்பட்டு வீட்டிலிருந்த பொருள்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, தம்பதி வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனா். இந்நிலையில், அந்த வழியாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த காா், தம்பதி மீது பலமாக மோதியது.

இதில், பலத்தக் காயம் அடைந்த இருவரையும் உறவினா்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இருவரையும் பரிசோதித்துவிட்டு யுவஸ்ரீ இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். விமல்ராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். குழந்தை, வீட்டுக்குள் உறவினா்களுடன் இருந்ததால் உயிா் தப்பியது.

நவல்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திவிட்டு காரை தாறுமாறாக ஓட்டிய நபரால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.