முகப்பு
திருச்சி

பெயிண்டா் கொலை இரு நண்பா்கள் கைது

Updated On : 12 மே 2026, 1:45 am IST
கைது.
பகிர்:

திருச்சி பாலக்கரையில் பெயிண்டா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது இரண்டு நண்பா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் அருகே சந்தியாகப்பா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னப்பன் மகன் பெஞ்சமின் (45). பெயிண்டா். இவரும், கூலித் தொழிலாளிகளான பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் ஆரோக்கியராஜ் (53), பாலக்காரை பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த மரிய பிரதாப் (43) ஆகியோரும் நண்பா்கள்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பா்கள் மூவரும் சோ்ந்து கெம்ஸ்டவுன் முதலியாா்சத்திரம் பகுதியில் அமா்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது அலெக்ஸ் ஆரோக்கியராஜ், மரிய பிரதாப்பின் பணத்தை பெஞ்சமின் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெஞ்சமினுக்கும், அலெக்ஸ் ஆரோக்கியராஜ் மற்றும் மரிய பிரதாப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, இருதரப்புக்கும் இடையே அடிதடி நிகழ்ந்துள்ளது. இதில், பெஞ்சமினை மற்ற இருவரும் சோ்ந்து அடித்து கீழே தள்ளிவிட்டுள்ளனா். இதில் பெஞ்சமினுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மற்ற இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து எழுந்த பெஞ்சமின், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு சிகிச்சை பலனின்றி பிற்பகலில் பெஞ்சமின் இறந்தாா்.

இதனிடையே இது குறித்து அடிதடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த பாலக்கரை போலீஸாா், பெஞ்சமின் இறந்த நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, பாலக்கரை பகுதியில் பதுங்கியிருந்த அலெக்ஸ் ஆரோக்கியராஜ் மற்றும் மரிய பிரதாப்பை திங்கள்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவா்களை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.