பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு
தாட்கோ மூலம் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தாட்கோ மூலம் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விண்ணப்பதாரர் பழங்குடியின விவசாயியாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் பட்டா இருக்க வேண்டும். அந்த நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும். இதில் பயன்பெற விரும்புவோர் https://fast.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவு செய்யவேண்டும்.
அப்போது, கேட்கப்பட்டுள்ள விவரங்களுடன் சாதிச்சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று, குடும்ப ஆண்டு வருமானச் சான்று, கல்வித்தகுதி, வயதுக்கான ஆதாரச் சான்று (பள்ளி மாற்றுச் சான்று,மதிப்பெண் சான்று, வாக்காளர் அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை) இவற்றில் ஏதாவது ஒன்றை அதற்கான இடத்தில் குறிப்பிட வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்கும் நிலப்பட்டா மற்றும் சிட்டா, அடங்கல் நகல் "அ' பதிவேடு நகல், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதற்கான வரைபடம்,
சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல், கிணறு அமையப்பெற்றுள்ள கிராமம், மோட்டார் குதிரை திறன், சம்மந்தப்பட்ட மின் வாரிய கோட்டம் ஆகிய விவரங்களுடன் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைபடுபவர்களின் வசதிக்காக அரியலூர் தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பித்து பயன்பெறலாம்.