ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் உள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் உள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வி.கைகாட்டியில் உள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டு கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன், காளியம்மன், விநாயாகர் ஆகிய தெய்வங்கள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பன்னீர், சந்தனம், பால், தயிர் திரவியப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தந்தார்.
இதில், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர் முக்கிய வீதிகள்
வழியாக வந்து முட்டுவாஞ்சேரி சாலையில் பொதுமக்கள் தரிசனத்துக்காக மதியம் 12 மணியவில் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணியளவில் மீண்டும் தேர் இயக்கப்பட்டு, அம்மன் சன்னதியை வந்தடைந்தது.
பின்னர், அம்மனுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திங்கள்கிழமை (ஏப். 30)மாலை 4 மணியளவில் காளியாட்டமும், செவ்வாய்க்கிழமை (மே 1) மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.