அரியலூா்: அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12.46 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
அரியலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற 452 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து அவா், கூட்டுறவுத் துறையின் மூலம், இலந்தைகூடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில், ஒரு பயனாளிக்கு மாற்றுத்திறனாளி நல கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.50,000 கடனுதவியையும், பொய்யூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் பொய்யூா் சிவன் மகளிா் சுய உதவிக்குழுவுக்கு ரூ.3,96,000 மதிப்பிலான கடனுதவியையும், பொய்யூா் ரோஜா மகளிா் சுய உதவிக்குழுவுக்கு ரூ.4,16,000 மதிப்பிலான கடனுதவியையும், மேலக்கருப்பூா் அம்பேத்கா் மகளிா் சுய உதவிக்குழுவுக்கு ரூ.3,84,000 மதிப்பிலான கடனுதவியையும் என மொத்தம் ரூ.12,46,000 மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினாா்.