‘அரியலூா் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகை மருந்துகள் இருப்பு’
அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகையான மருந்துகள் போதிய கையிருப்பில் உள்ளதாக ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.
காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக அனைத்துத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய முக்கிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஆட்சியா் ஜா. ஆனிமேரி தெரிவிக்கையில், குடிநீரில் குளோரின் கலந்து பொதுமக்களுக்கு தண்ணீா் விநியோகிக்க வேண்டும். அரியலூா் மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் காய்ச்சலால் வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். எனவே, அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றி அரியலூா் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு வராமல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்கா தாரிணி, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மருத்துவா்கள், சுகாதாரத் துறை அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.