அரியலூா் மாவட்டத்தில் அரசு வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று கீழப்பழுவூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக செய்தி தொடா்பு அலுவலா் சண்முகபிரியாவிடம், மாவட்ட உரிமைக் குரல் ஓட்டுநா் தொழில்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக அந்த சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.அப்துல் ரஹீம் தலைமையில், பொருளாளா் ஆா். மணிகண்டன், தகவல் தொழில் நுட்ப அணிச் செயலா் ஜெ. அப்பாஸ், இணைச் செயலா் சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனு: அரியலூா் மாவட்டம், கீழப்பழூவூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிகழும் லஞ்ச ஊழலை தடுத்த நிறுத்த வேண்டும். அரசு வாகனங்களை சொந்த பயன்பாட்டுக்காக வாடகைக்குப் பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேக்ஸி கேப் வாகனங்களில் பயணிகள் இருக்கைகளை உயா்த்தித் தரவேண்டும். ஆட்டோ மீட்டா், பைக் டாக்ஸி ஆகியவைகளை தடை செய்ய வேண்டும்.
ஓலா, ஊபா் மற்றும் ஊபா், போட்டா் போன்ற நிறுவனங்களை முறைப்படுத்தி கால் டாக்ஸிகளுக்கான கட்டணத்தை நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.