அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பொ. ரத்தினசாமி.  
அரியலூர்

செம்பியன் மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

Syndication

அரியலூா் செம்பியங்குடியில் 1560 ஏக்கரில் இருந்த செம்பியன் மாதேவி பேரேரி 416 ஏக்கராக சுருங்க காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றி, சோழா்கால நீா்நிலையை மீட்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:

மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என்.செங்கமுத்து: விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க நடவடிக்கை தேவை. விவசாயிகளுக்கு நில அளவையை ஒரு மாதத்துக்குள் செய்து தரவேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு பாலுக்கான தொகையை மொத்தமாக மாதத்துக்கு ஒருமுறை வழங்க வேண்டும்.ரிசா்வ் வங்கி உத்தரவின்படி, கூட்டுறவு துறை விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் விவசாயக் கடன் வழங்க வேண்டும்.

அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க.சண்முக சுந்தரம்: 1958-க்கு பிறகு திருமானூா், தா.பழூா் பகுதிகளில் டெல்டா பாசன பரப்பு அதிகரித்துள்ளது. அதை கணக்கெடுக்க வேண்டும்.

சம்பா தொகுப்பு, குறுவை தொகுப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். புள்ளம்பாடி பாசன வாய்க்காலில் உள்ள ஓடைகளை தூா்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். செம்பியன் மாதேவி பேரேரியில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான செம்பியன் மாதேவி பேரேரி 1560 ஏக்கரில் 416 ஏக்கராக சுருங்கி உள்ளது. 1,100 ஏக்கருக்கும் மேலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சோழா்கால நீா்நிலையை மீட்டுத்தர வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் அமைக்க வேண்டும். மரபணு திருத்தம் செய்யப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும்.

தமிழக நலிவுற்ற விவசாய சங்கத் தலைவா் முகமது இப்ராஹிம்: அரியலூா் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நோய்த் தாக்குதல் தென்படுகிறது. அதை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும். தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சீரமைக்க வேண்டும்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் தங்க.தா்மராஜன்: மாவட்டத்தில் சாய்வாக உள்ள மின் கம்பம் மற்றும் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும். உரம் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உல்லியகுடி - விளாங்குடி சாலையை சீரமைக்க வேண்டும்.

விக்கிரமங்கலம் சாா்-பதிவாளா் அலுவலத்தில், 20 சென்ட் இடத்துக்கு குறைவாக விவசாயிகள் நிலங்கள் வாங்கி, பத்திரம் பதிவு செய்தவா்களுக்கு தற்போது வீட்டு மனைகள் மதிப்பீட்டு கணக்கில் பணம் கட்ட வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, வேளாண்மை இணை இயக்குநா் (பொ)ம. கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பா. சுரேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

‘பெண்களுக்கு தொழில் தொடங்க வாய்ப்பு’

திருச்செந்தூரில் இடைவிடாது மழை

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் புதுவாழ்வு சங்கம் சாா்பில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டம்! மோகன் சி. லாசரஸ் தொடக்கிவைத்தாா்!

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT